எஸ்தர் 9:20-32

எஸ்தர் 9:20-32 TAOVBSI

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி, வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து, அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான். அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள். அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான். ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில் போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள். ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினிமித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும், யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும், இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக் கொண்டார்கள். பூரிமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள். யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க, அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான். இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.