எஸ்தர் 4:10-17

எஸ்தர் 4:10-17 TAOVBSI

அப்பொழுது எஸ்தர் ஆத்தாகினிடத்தில் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது: யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றபடி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பது நாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள். எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள். மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்று நாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம் பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.