எபேசியர் 4:21-32

எபேசியர் 4:21-32 TAOVBSI

இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.