ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்,
ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.
இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.
அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை.
அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்த தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள்.
பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து வைக்கவேண்டும் என்றார்கள்.
அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப்பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான்.
தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.
அப்பொழுது அந்த மனுஷர் கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம் செய்கிறதைக் கண்டார்கள்.
பின்பு அவர்கள் ராஜாவுக்கு முன்பாக வந்து, ராஜாவின் தாக்கீதைக்குறித்து: எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா என்றார்கள். அதற்கு ராஜா: அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான்.
அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி: சிறைப்பிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான்பண்ணும் விண்ணப்பத்தைப்பண்ணுகிறான் என்றார்கள்.
ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிக்கிறதற்காகச் சூரியன் அஸ்தமிக்குமட்டும் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான்.
அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக்கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள்.
அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான்.
ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான்.
பின்பு ராஜா தன் அரமனைக்குப் போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.
காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான்.
ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.
அப்பொழுது தானியேல்: ராஜாவே நீர் என்றும் வாழ்க.
சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.