தானியேல் 10:15-21

தானியேல் 10:15-21 TAOVBSI

அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன், அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என்வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன். ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன். அப்பொழுது மனுஷரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி, பிரியமான புருஷனே, பயப்படாதே; உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன். அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான். சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத் தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.