அப்போஸ்தலர் 8:9-24

அப்போஸ்தலர் 8:9-24 TAOVBSI

சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான். தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள். அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள். தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம்பெற்றார்கள். அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான். சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தைமாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான்.