அந்த ஏழுநாட்களும் நிறைவேறிவருகையில் ஆசியா நாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனை தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு: இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்தஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள். எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள். அப்பொழுது நகரமுழுவதும் கலக்கமுற்றது; ஜனங்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப் பிடித்து, அவனை தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது. அவர்கள் அவனைக் கொலைசெய்ய எத்தனித்திருக்கையில், எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாதிபதிக்குச் செய்திவந்தது. உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாதிபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள். அப்பொழுது சேனாதிபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான். அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று, இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது. அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாதிபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா? நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங்கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான். அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப்பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயுபாஷையிலே பேசத்தொடங்கினான்
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் அப்போஸ்தலர் 21
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: அப்போஸ்தலர் 21:27-40
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்