அப்போஸ்தலர் 14:8-18

அப்போஸ்தலர் 14:8-18 TAOVBSI

லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள்தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள். இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது.