எப்பிராயீம் மலைதேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.
அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்தி பேர் அன்னாள், மற்றவள் பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை.
அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஒப்னியும் பினெகாசும் இருந்தார்கள்.
அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்குபோட்டுக் கொடுப்பான்.
அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார்.
கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள்.
அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்.
அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்.
சீலோவிலே அவர்கள் புசித்துக்குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான்.
அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி:
சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்.
அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்.
அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள்மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து,
அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான்.
அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன்.
உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள்.
அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.
அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை.
அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார்.
சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள்.