ஒரு பெண், குழந்தை பெறுவதற்கான நேரத்தை வலியோடு எதிர்ப்பார்த்துக்கொண்டிருப்பது போன்று தேவனால் படைக்கப்பட்டவையெல்லாம் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலகம் மட்டுமல்ல. நாமும் உள்ளுக்குள் வேதனையோடு காத்துக்கொண்டிருக்கிறோம். தேவனுடைய வாக்குறுதியினுடைய முதல் பாகம் போல் நாம் ஆவியின் முதல் பலனைப் பெற்றிருக்கிறோம். நம்மை தேவன் தமது பிள்ளைகளாக்குவார் என்று நாமும் எதிர்பார்க்கிறோம். அதாவது நாம் நமது சரீரத்தின் விடுதலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த நம்பிக்கையால்தான் நாம் பாதுகாக்கப்பட்டுள்ளோம். கண்ணால் காண முடிவதை நம்புவது என்பது உண்மையில் நம்பிக்கையன்று, நம்மிடம் ஏற்கெனவே இருப்பதை மக்கள் நம்பவேண்டியதில்லை. இதுவரை நாம் பெறாததைப் பெறுவதற்குப் பொறுமையோடு காத்திருப்போம். அதோடு ஆவியானவர் நமக்கு உதவுகிறார். நாம் பலவீனமானவர்கள். ஆவியானவர் நமது பல வீனங்களில் உதவுகிறார். நாம் எவ்வாறு வேண்டிக்கொள்வது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறோம். எனினும் ஆவியானவர் நமக்காக தேவனிடம் வேண்டுகிறார். அவரது வேண்டுதல்களை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல இயலாது. மக்களின் மனதில் உள்ளதை தேவன் ஆராய்கிறார். ஆவியானவரின் மனதில் உள்ளதும் தேவனுக்குத் தெரியும். ஏனென்றால் தேவனுடைய விருப்பப்படியே ஆவியானவரின் வேண்டுதல்கள் மக்களுக்காக அமைந்திருக்கும். தன்னை நேசிக்கும் மக்களுக்கு தேவன் எல்லாவற்றின் மூலமும் நன்மை செய்கிறார் என்பதை நாம் அறிகிறோம். தேவன் இம்மக்களைத் தம் திட்டப்படியே தேர்ந்தெடுத்துள்ளார். தேவன் அம்மக்களை உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே அறிந்திருக்கிறார். அம்மக்களைத் தம் குமாரனைப் போலவே இருக்கும்படி முடிவு செய்தார். அநேக சகோதரர்களுக்குள்ளே தமது குமாரனே முதற் பேறானவராய் இருக்க வேண்டும் என விரும்பினார். எனவே தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாய் இருப்பதற்கு முன்குறித்திருக்கிறார். அவர்களைத் தேர்ந்தெடுத்தார். அவர்களை நீதிமான்களாக்கினார். அவர்களை மகிமையும்படுத்தினார். எனவே, இதைப் பற்றி என்ன சொல்லலாம்? தேவன் நம்மோடு இருந்தால் எவராலும் நாம் தோற்கடிக்கப்பட முடியாது. தேவன் நமக்காகத் தனது சொந்தக் குமாரனையும் துன்பத்துக்குட்படுத்தினார். நமக்காகவே தன் குமாரனை தேவன் அர்ப்பணித்தார். எனவே இயேசு கிறிஸ்து இப்போது நம்மோடு இருப்பதால், தேவன் எல்லாவற்றையும் தருவார். தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களை யாரால் குறை சொல்ல முடியும்? எவராலும் முடியாது, ஏனென்றால் தேவன்தான் தமது மக்களை நீதிமான்களாக்குகிறார். தேவனுடைய மக்கள் தவறுடையவர்கள் என்று யாரால் குற்றம்சாட்ட முடியும்? எவராலும் முடியாது. கிறிஸ்து இயேசு நமக்காக இறந்தார். அதோடு முடியவில்லை. அவர் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தார். இப்போது அவர் தேவனுடைய வலதுபுறத்தில் இருந்துகொண்டு நமக்காக வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் அன்பிலிருந்து எவற்றாலும் நம்மைப் பிரிக்க இயலுமா? இயலாது. தொல்லைகளால் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்க இயலுமா? பிரச்சனைகளும், தண்டனைகளும் இயேசுவிடமிருந்து நம்மைப் பிரிக்குமா? இயலாது. உணவும் உடையும் இல்லாத வறுமை கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது. ஆபத்தும் மரணமும் கூட நம்மை அவரது அன்பிலிருந்து பிரிக்க முடியாது. “எப்பொழுதும் உமக்காக நாங்கள் மரண ஆபத்தில் இருக்கிறோம். வெட்டப்படும் ஆடுகளைவிடவும் நாம் பயனற்றவர்கள் என மக்கள் நினைக்கின்றனர்” என எழுதப்பட்டுள்ளது. தேவன் நம்மீது அன்புகொண்டவர். அவரால் நாம் அனைத்திலும் பெரும் வெற்றி பெறுகிறோம். தேவனுடைய அன்பிலிருந்து நம்மை எதனாலும் பிரிக்க முடியாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். சாவாலோ, வாழ்வாலோ, தேவ தூதர்களாலோ, ஆளும் ஆவிகளாலோ, தற்காலப் பொருளாலோ, பிற்கால உலகத்தாலோ, நமக்கு மேலே உள்ள சக்திகளாலோ, நமக்குக் கீழே உள்ள சக்திகளாலோ, உலகில் உள்ள வேறு எதனாலுமோ கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள தேவனுடைய அன்பிலிருந்து நம்மை ஒருபோதும் பிரித்துவிட முடியாது.
வாசிக்கவும் ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8
கேளுங்கள் ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 8:22-39
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்