ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 12:4-16

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 12:4-16 TAERV

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு சரீரம் உள்ளது. அதற்குப் பல உறுப்புகளும் உள்ளன. எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை. இது போலவே, நாம் பல வகை மக்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் நாம்அனைவரும் ஒரே சரீரமாக இருக்கிறோம். நாம் அந்த சரீரத்தின் பல உறுப்புகள். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளைச் சார்ந்துள்ளன. நமக்குப் பலவிதமான வரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வரமும் நமக்கு தேவனுடைய இரக்கத்தால் கிடைத்தது. நம்மிடையே தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தைப் பெற்றவன் அதனை தன் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த வேண்டும். சேவை செய்வதற்கான வரத்தைப் பெற்ற ஒருவன் நன்றாக சேவை செய்வானாக. போதிக்கும் வரத்தைப் பெற்ற ஒருவன் போதிப்பானாக! மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்லும் வரத்தைப் பெற்ற ஒருவன் அவ்வாறே ஆறுதல் சொல்வானாக. மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுத்து உதவுகிற வரத்தைப் பெற்ற ஒருவன் ஏராளமாகக் கொடுத்து உதவுவானாக! தலைவனாக இருக்க வரத்தைப் பெற்றவன் கடுமையாகப் பணியாற்றி சிறந்த தலைவனாக இருப்பானாக! மற்றவர்களிடம் இரக்கம் காட்டும் வரத்தைப்பெற்ற ஒருவன் மகிழ்ச்சியோடு இரக்கம் காட்டுவானாக! உங்கள் அன்பு உண்மையானதாக இருக்க வேண்டும். பாவத்துக்குரியவற்றை வெறுத்து ஒதுக்குங்கள். நல்லவற்றை மட்டும் செய்யுங்கள். சகோதர சகோதரிகளைப் போன்று ஒருவருக்கொருவர் இதமாக அன்பு செலுத்துங்கள். மரியாதை செய்வதில் ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளங்கள். நீங்கள் கர்த்தருக்காக உழைக்க வேண்டிய காலத்தில் சோம்பேறியாக இராதீர்கள். அவருக்குச் சேவை செய்வதிலே ஆவிப் பூர்வமாக இருங்கள். உங்களுக்கு விசுவாசம் இருப்பதால் மகிழ்ச்சியாய் இருங்கள். எப்பொழுதும் பிரார்த்தனை செய்யுங்கள். தேவனுடைய மக்களுக்குத் தேவை ஏற்படும்போது உதவி செய்யுங்கள். அம்மக்களுக்கு உங்கள் வீடுகளில் அடைக்கலம் கொடுங்கள். உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். அவர்களுக்கு நல்லதைக் கூறுங்கள். அவர்களை சபிக்காதீர்கள். மற்றவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கும்போது நீங்களும் அவர்களோடு மகிழ்ச்சியோடு இருங்கள். மற்றவர்கள் துக்கமாய் இருக்கும்போது நீங்கள் அவர்களோடு துக்கமாய் இருங்கள். ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழுங்கள். எவ்வளவு ஞானம் எனக்கு உண்டு என்று மமதை கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்கு முக்கியமாய்த் தோன்றாதவர்களோடும் கூட நட்புடன் இருங்கள். சுய பெருமை பாராட்டாதீர்கள்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 12:4-16

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 12:4-16 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்