ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 10:1-11

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 10:1-11 TAERV

சகோதர சகோதரிகளே, அனைத்து யூதர்களும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். அதைத் தான் தேவனிடம் வேண்டி பிரார்த்தனை செய்கிறேன். யூதர்களைப் பற்றி என்னால் இவ்வாறு கூற முடியும். அவர்கள் உண்மையில் தேவனைப் பின்பற்ற விரும்புகிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான வழி தெரியவில்லை. தேவனுக்கேற்ற நீதிமான்களாகும் தேவனுடைய வழி அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் தம் சொந்த வழியிலேயே நீதிமான்களாக முயன்றனர். எனவே அவர்கள் தேவனுடைய வழியை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறிஸ்து சட்டவிதியின் முடிவாய் இருக்கிறார். அதனால் அவரிடம் நம்பிக்கையாக இருக்கிற எவரும் தேவனுக்கேற்ற நீதிமானாக இயலும். மோசே சட்டவிதிகளைப் பின்பற்றி நீதிமானாகும் வழியைப் பற்றி எழுதியிருக்கிறார்: “சட்டவிதியைப் பின்பற்றி வாழ நினைக்கிறவன், சட்டவிதியின்படி காரியங்களையும் செய்ய வேண்டும்,” ஆனால் விசுவாசத்தினாலே நீதிமானாவதைப் பற்றி வேதவாக்கியம், “யார் மோட்சத்துக்குப் போகக் கூடியவன் என்று நீ உனக்குள்ளே சொல்லாதே.” (இதற்கு “எவனொருவன் மோட்சத்துக்குப் போய் கிறிஸ்துவை பூமிக்கு அழைத்து வரக்கூடியவன்?” என்று பொருள்) “எவனொருவன் உலகத்துக்கும் கீழே போகக் கூடியவன் என்றும் சொல்லாதே” (இதற்கு “எவனொருவன் கீழே போய் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து ஏறி வரப்பண்ணுபவன்” என்று பொருள்) என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் “தேவனுடைய போதனைகள் உங்களுக்கு அருகில் உள்ளது. அவை உங்கள் வாயிலும் இதயத்திலும் உள்ளன” என்றும் எழுதப்பட்டிருக்கின்றது. அப்போதனைகள் மக்களிடம் நாம் சொல்லத்தக்க நம்பிக்கையைப் பற்றிய போதனைகளாகும். உனது வாயால் நீ “இயேசுவே கர்த்தர்” என்று சொல்வாயானால் இரட்சிக்கப்படுவாய். உனது இதயத்தில் நீ “தேவன் இயேசுவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்தார்” என்று நம்புவாயானால் இரட்சிக்கப்படுவாய். நாம் இதயத்தில் விசுவாசித்தால் தேவனுக்கேற்ற நீதிமானாகிறோம். நாம் விசுவாசிப்பதை வாயால் சொன்னால் இரட்சிக்கப்படுகிறோம். “கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கிற எவரும் வெட்கப்படுவதில்லை” என்று எழுதப்பட்டிருக்கிறது.

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 10:1-11 க்கான வீடியோ