யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 19:1-8

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 19:1-8 TAERV

இதற்குப்பிறகு பரலோகத்தில் உள்ள ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன், அவர்கள், “அல்லேலூயா! தேவனைத் துதியுங்கள், வெற்றியும், மகிமையும், வல்லமையும் நம் தேவனுக்கு உரியது. அவரது நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நேர்மையுமானவை. நமது தேவன் மாபெரும் வேசியைத் தண்டித்துவிட்டார். இந்த உலகத்தை தன் வேசித்தனத்தால் கெடுத்தவள் அவளே. அவள் கொன்ற தமது ஊழியர்களின் இரத்தத்துக்கு தேவன் பழிவாங்கினார்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பரலோகத்திலுள்ள மக்கள், “அல்லேலூயா! அவள் எரிவதால் வரும் புகை என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கும்” என்றும் சொன்னார்கள். பிறகு இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் பணிந்து வணங்கி, சிம்மாசனத்தில் வீற்றிருந்த தேவனை வழிபட்டனர். “ஆமென் அல்லேலூயா” என அவர்கள் சொன்னார்கள். பின்னர் சிம்மாசனத்தில் இருந்து ஒரு குரல் வந்தது. அது, “நமது தேவனுக்கு சேவை செய்யும் அனைத்து மக்களே, அவரைத் துதியுங்கள். நமது தேவனுக்கு மகிமையளிக்கும் பெரியோரும் சிறியோருமான மக்களே, நமது தேவனைத் துதியுங்கள்!” என்று கூறியது. அதற்குப் பிறகு ஏராளமான மக்களின் ஓசையைப்போல ஒலித்ததைக் கேட்டேன். அது பெரு வெள்ளத்தின் இரைச்சலைப்போலவும் இடியோசை போலவும் கேட்டது. அவர்கள் சொன்னார்கள்: “அல்லேலூயா! நமது தேவனாகிய கர்த்தர் ஆளுகிறார். அவரே சர்வ வல்லமையுள்ளவர். நாம் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம். தேவனுக்கு மகிமையைக் கொடுப்போம்! ஏனெனில் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்தது. ஆட்டுக்குட்டியானவரின் மணமகள் தன்னைத் தயாராக்கிக்கொண்டாள். மெல்லிய ஆடைகள் அவள் அணியும்படியாகத் தரப்பட்டன. அந்த ஆடைகள் பளபளப்பானவை, சுத்தமானவை.”

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 19:1-8 க்கான வீடியோ