சங்கீத புத்தகம் 119:9-20

சங்கீத புத்தகம் 119:9-20 TAERV

ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்? உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே. நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன். தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும். நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன். ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன். ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர். உமது சட்டங்களை எனக்குப் போதியும். உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன். வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக் கற்பதில் களிப்படைவேன். நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன். உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன். நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன். உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன். உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும். அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும். கர்த்தாவே, எனது கண்களைத் திறவும். நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும், நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும். நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன். கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும். நான் எப்போதும் உமது நியாயங்களைக் கற்க விரும்புகிறேன்.