நீதிமொழிகள் 6:24-35

நீதிமொழிகள் 6:24-35 TAERV

பாவமுள்ள பெண்ணிடம் உன்னைப் போகவிடாமல் தடுக்கும். அவர்களது போதனைகள், தன் கணவனை விட்டு விலகி வந்த பெண்களின் மென்மையான வார்த்தைகளிலிருந்து உன்னைக் காப்பாற்றும். அப்பெண் அழகுள்ளவளாக இருக்கலாம். ஆனால், அந்த அழகு உன் உள்ளத்தை அழித்து உன்னைத் தூண்டாமல் பார்த்துக்கொள். அவளது கண்கள் உன்னைக் கவர்ந்துக்கொள்ளவிடாதே. வேசியானவள் ஒரு ரொட்டித்துண்டுக்குரிய விலையையே பெறுவாள். ஆனால் அடுத்தவன் மனைவியோ உனது வாழ்க்கையையே இழக்கச் செய்வாள். ஒருவன் தன் மடியிலே நெருப்பை வைத்திருந்தால் அது அவனது ஆடைகளை எரித்துவிடும். ஒருவன் நெருப்புக்குள் இறங்கி நடந்தால் அவனது பாதங்கள் எரிந்து கருகும். இது போலவே இன்னொருவனது மனைவியோடு படுப்பவன் துன்பப்படுவான். பசியின் காரணமாக ஒருவன் உண்பதற்காக உணவைத் திருடலாம். அகப்பட்டுக்கொண்டால், திருடியதைப்போல ஏழு மடங்குக்கு அதிகமாக அபராதம் செலுத்தவேண்டும். அது அவனுடைய அனைத்துப் பொருட்களுக்கும் ஈடானதாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் அவனைப் புரிந்துக்கொள்வார்கள். அவனது மரியாதையைக் குறைத்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால் ஒருவன் முட்டாள்தனமாக விபச்சாரமாகிய பாவத்தைச் செய்தால், அவன் தன்னையே அழித்துக்கொள்கிறான். அவனது அழிவிற்கு அவனே காரணம். ஜனங்களிடம் அவன் தனது மதிப்பு முழுவதையும் இழந்துவிடுவான். இந்த அவமானத்தை அவனால் எப்பொழுதும் நீக்க முடியாது. அப்பெண்ணின் கணவன் பொறாமை கொள்ளுவான். அவன் கோபமாகவும் இருப்பான். அவன் இவனைத் தண்டிக்க எதையாவது செய்வான். அவனது கோபத்தைத் தடுக்க எந்தப் பொருளையும் எவ்வளவு தொகையையும் தர இயலாது.