நீதிமொழிகள் 20:1-12

நீதிமொழிகள் 20:1-12 TAERV

திராட்சைரசமும் மதுவும் ஜனங்களின் சுயக் கட்டுப்பாட்டைக் குலைத்துவிடுகிறது. அவர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்வார்கள். அவர்கள் போதை ஏறி முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள். ஒரு ராஜாவின் கோபமானது சிங்கத்தின் கெர்ச்சினையைப் போன்றது. நீ ஒரு ராஜாவைக் கோபப்படுத்தினால் உன் வாழ்வை இழந்துவிடுவாய். எந்த முட்டாளும் ஒரு வாதத்தைத் தொடங்கலாம். எனவே வாதம்செய்ய மறுப்பவனை நீ மதிக்க வேண்டும். ஒரு சோம்பேறி விதைகளை விதைக்கவும் சோம்பேறித்தனமாயிருக்கிறான். அதனால், அறுவடைக் காலத்தில் உணவை எதிர்ப்பார்த்தாலும் அவன் எதையும் பெறுவதில்லை. நல்ல அறிவுரையானது ஆழமான கிணற்றிலிருந்து பெறும் தண்ணீரைப் போன்றது. அதனால் ஒரு அறிவாளி அடுத்தவனிடமிருந்து கற்றுக்கொள்ள கடுமையாக முயற்சிப்பான். பலர் தம்மை உண்மையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் கூறிக்கொள்வார்கள். ஆனால் உண்மையிலேயே அப்படிப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது அரிது. நல்லவன் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றான். அவன் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். ஒரு ராஜா நியாயந்தீர்க்க ஆசனத்தில் உட்காரும்போது அவன் தன் கண்களால் சகல தீமைகளையும் கவனிக்க முடியும். ஒருவன் உண்மையாகவே, தான் செய்கிறவைகளைத் தன்னாலியன்றவரை நன்றாகச் செய்கிறேன் என்று சொல்லமுடியுமா? ஒருவன் பாவம் இல்லாதவன் என்று உண்மையில் சொல்லமுடியுமா? முடியாது. தவறான அளவுக் கருவிகளையும் எடைக் கற்களையும் பயன்படுத்தி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார். ஒரு குழந்தைகூடத் தனது செயலால் நல்லதா கெட்டதா என்று வெளிப்படுத்த முடியும். அது நல்லதா நேர்மையானதா என்பதை நீ கவனித்தால் அறிந்துகொள்ள முடியும். பார்ப்பதற்குக் கண்களையும் கேட்பதற்குக் காதுகளையும் கர்த்தர் நமக்காகப் படைத்துள்ளார்.