எண்ணாகமம் 20:1-12

எண்ணாகமம் 20:1-12 TAERV

இஸ்ரவேல் ஜனங்கள் முதல் மாதத்தில் சீன் பாலைவனத்தை அடைந்தனர். ஜனங்கள் காதேசில் தங்கியிருந்தபோது மிரியாம் மரணமடைந்தாள். அவள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள். அந்த இடத்தில் ஜனங்களுக்குப் போதுமான தண்ணீர் இல்லை. எனவே ஜனங்கள் ஒன்று கூடி வந்து இதைப்பற்றி மோசேயிடமும் ஆரோனிடமும் முறையிட்டனர். அவர்கள், மோசேயிடம் விவாதித்து, “எங்கள் சகோதரர்களைப் போலவே நாங்களும் இந்த இடத்தில் கர்த்தர் முன்னால் மரித்துப்போயிருக்கவேண்டும்? எதற்காக கர்த்தருடைய ஜனங்களை இந்தப் பாலைவனத்துக்கு அழைத்து வந்தீர்கள்? நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கேயே மரித்துப் போகவேண்டும் என்று விரும்புகின்றீரா? எங்களை எகிப்திலிருந்து இந்த மோசமான இடத்திற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்? இங்கே தானியங்கள் இல்லை. அத்திமரமும், திராட்சை செடிகளும், மாதளஞ் செடியும், குடிக்க தண்ணீர் கூட இல்லையே” என்றனர். எனவே, மோசேயும் ஆரோனும் கூட்டத்தை விட்டு விலகி ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலுக்குச் சென்று அங்கே அவர்கள் தரையில் விழுந்து வணங்கினார்கள். கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. கர்த்தர் மோசேயோடு பேசினார். அவர், “சிறப்புக்குரிய உன் கைத் தடியை எடுத்துக்கொள். உனது சகோதரன் ஆரோனையும் ஜனங்கள் கூட்டத்தையும் அழைத்துக்கொண்டு பாறையின்மீது போ. ஜனங்கள் முன்னால் பாறையோடு பேசு. பிறகு பாறையிலிருந்து தண்ணீர் சுரந்து வரும். அந்த தண்ணீரை நீ ஜனங்களுக்கும் மிருகங்களுக்கும் தரலாம்” என்றார். பரிசுத்தக் கூடாரத்திற்குள் கர்த்தர் முன்னிலையில் கைத்தடி இருந்தது. கர்த்தர் சொன்னபடியே மோசே கைத்தடியை எடுத்துக்கொண்டான். மோசேயும், ஆரோனும் ஜனங்களிடம் பாறையின் முன்னால் கூடுமாறு சொன்னார்கள். பிறகு மோசே, “நீங்கள் எப்போதும் முறையிடுகிறீர்கள். இப்போது நான் சொல்வதைக் கவனியுங்கள். நான் இந்த பாறையிலிருந்து தண்ணீர் வரும்படி செய்வேன்” என்றான். மோசே தன் கையை உயர்த்தி பாறையின் மீது தனது கோலால் இருமுறை அடித்தான். தண்ணீர் பாறையிலிருந்து பீறிட்டு வெளியே வந்தது. ஜனங்களும் மிருகங்களும் அந்த தண்ணீரைக் குடித்தனர். ஆனால் கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களும் இங்கே கூடியுள்ளனர். ஆனால் நீங்கள் என்னை கனப்படுத்தவில்லை. தண்ணீரை பெறும் வல்லமை என்னிடமிருந்து வந்ததை நீங்கள் ஜனங்களுக்கு காண்பிக்கவில்லை. நீங்கள் என்னில் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் ஜனங்களிடம் காட்டவில்லை. ஆகையால் நான் அவர்களுக்கு கொடுக்கப்போகும் தேசத்திற்குள் நீங்கள் ஜனங்களை அழைத்துக்கொண்டு செல்லமாட்டீர்கள்!” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்