நெகேமியாவின் புத்தகம் 9:13-21

நெகேமியாவின் புத்தகம் 9:13-21 TAERV

பிறகு நீர் சீனாய் மலையிலிருந்து இறங்கினீர். நீர் பரலோகத்திலிருந்து அவர்களோடு பேசினீர். நீர் அவர்களுக்கு நல்ல சட்டங்களையும் கொடுத்தீர். நீர் அவர்களுக்கு மிக நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமானவற்றை கொடுத்தீர். உமது பரிசுத்தமான ஓய்வுநாளைப் பற்றியும் சொன்னீர். உமது தாசனாகிய மோசேயைப் பயன்படுத்தி, நீர் அவர்களுக்கு கற்பனைகளையும் போதனைகளையும் சட்டங்களையும் கொடுத்தீர். அவர்கள் பசியோடு இருந்தார்கள். எனவே, பரலோகத்திலிருந்து அவர்களுக்கு உணவைக் கொடுத்தீர். அவர்கள் தாகமாய் இருந்தார்கள். எனவே, பாறையிலிருந்து அவர்களுக்கு தண்ணீரைக் கொடுத்தீர். நீர் அவர்களிடம், ‘வாருங்கள், இந்நாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றீர். நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி அவர்களுக்காக நாட்டை எடுத்துக்கொண்டீர். ஆனால் எங்கள் முற்பிதாக்களான அந்த ஜனங்கள் பெருமைகொண்டனர். அவர்கள் பிடிவாதமானவர்களானார்கள். அவர்கள் உமது கட்டளைகளுக்கு கீழ்ப்படிய மறுத்தனர். அவர்கள் கவனிக்க மறுத்தனர். நீர் செய்த அற்புதங்களை மறந்தனர். அவர்கள் எகிப்திற்கு மீண்டும் சென்று அடிமைகளாகத் தலைவரை அமர்த்தினார்கள்! “ஆனால் நீர் மன்னிக்கிற தேவன்! நீர் கருணையும் மிகுந்த இரக்கமும் உடையவர். நீர் பொறுமையும் முழு அன்பும் உடையவர். எனவே நீர் அவர்களைவிட்டு விலகவில்லை. அவர்கள் தங்கத்தால் கன்றுக்குட்டிகைளைச் செய்து, ‘இவை தான் நம்மை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தெய்வங்கள்’ என்று சொன்னபோதுங்கூட நீர் அவர்களை விட்டு விலகவில்லை. நீர் மிகவும் கருணை உடையவர்! எனவே, நீர் அவர்களை வனாந்தரத்தில் கைவிடவில்லை. பகலில் அவர்களிடமிருந்த உயர்ந்த மேகங்களை எடுக்கவில்லை. நீர் அவர்களைத் தொடர்ந்து வழி காட்டினீர். இரவில் விளக்குத்தூணை அவர்களிடமிருந்து எடுக்கவில்லை. அவர்களது பாதைக்குத் தொடர்ந்து வெளிச்சம் தந்தீர். எந்த வழியில் போக வேண்டும் என்று அவர்களுக்கு வழிகாட்டினீர். அவர்களை அறிவாளிகளாக்க உமது நல் ஆவியைக் கொடுத்தீர். அவர்களுக்கு உணவாக மன்னாவைக் கொடுத்தீர். நீர் அவர்களின் தாகத்திற்கு தண்ணீரைக் கொடுத்தீர். 40 ஆண்டுகளுக்கு அவர்களை கவனித்து வந்தீர்! வனாந்தரத்தில் அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் ஆடைகள் பழையதாய் போகவில்லை. அவர்களின் பாதங்கள் வீங்கவோ புண்ணாகவோ இல்லை.