நெகேமியாவின் புத்தகம் 8:10-18

நெகேமியாவின் புத்தகம் 8:10-18 TAERV

நெகேமியா, “போங்கள், நல்ல உணவையும் இனிய பானங்களையும் குடித்து மகிழுங்கள். கொஞ்சம் உணவையும் பானத்தையும் உணவு எதுவும் தயார் செய்யாத ஜனங்களுக்குக் கொடுங்கள். இன்று கர்த்தருக்கு சிறப்பிற்குரிய நாள். துக்கப்படவேண்டாம். ஏனென்றால் கர்த்தருடைய மகிழ்ச்சியானது உங்களைப் பலமுடையவர்களாகச் செய்யும்” என்றான். லேவியின் கோத்திரத்தாரும் ஜனங்கள் அமைதியடைய உதவினார்கள். அவர்கள், “அமைதியாக இருங்கள், இது சிறப்பிற்குரிய நாள், துக்கப்பட வேண்டாம்” என்றனர். பிறகு ஜனங்கள் எல்லாரும் சிறப்பான உணவை உண்ணச் சென்றனர். அவர்கள், தம் உணவையும் பானங்களையும் பகிர்ந்துக்கொண்டனர். அவர்கள் சந்தோஷமாக இருந்தனர். அச்சிறப்பு நாளைக் கொண்டாடினார்கள். அவர்கள் ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க முயற்சி செய்துக்கொண்டிருந்த கர்த்தருடைய போதனைகளை புரிந்துக்கொண்டனர். பிறகு அம்மாதத்தின் இரண்டாவது நாளில் அனைத்து குடும்பத் தலைவர்களும் போய் எஸ்றாவையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் சந்தித்தனர். அவர்கள் அனைவரும் வேதபாரகனாகிய எஸ்றாவைச் சுற்றி சட்டத்தின் வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள கூடினார்கள். அவர்கள் கற்று சட்டத்தில் கட்டளைகள் இருப்பதைக் கண்டனர். கர்த்தர் இந்தக் கட்டளையை மோசே மூலம் ஜனங்களுக்குக் கொடுத்தார். ஆண்டின் ஏழாவது மாதத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் ஒரு விஷேச விடுமுறையை (கூடாரங்கள் விழா) கொண்டாட எருசலேமிற்குப் போகவேண்டும். அவர்கள் தற்காலிகமாக கூடாரங்களில் அங்கே குடியிருக்கவேண்டும். ஜனங்கள் தங்களது சகல நகரங்களுக்கும் எருசலேமிற்கும் போய் இவற்றைக் கூறவேண்டும்: “மலை நாடுகளுக்குப் போங்கள். பலவகையாக ஒலிவ மரங்களிலிருந்து கிளைகளை எடுங்கள். மிருதுச்செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மரப்பட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள். அக்கிளைகளைக் கொண்டு தற்காலிகமாகக் கூடாரங்களை அமையுங்கள். சட்டம் சொல்லுகிறபடிச் செய்யுங்கள்.” எனவே, ஜனங்கள் வெளியே போய் அம்மரக் கிளைகளை எடுத்தனர். பிறகு அவர்கள் தற்காலிகமான கூடாரங்களைத் தங்களுக்காக அமைத்தனர். அவர்கள் தங்கள் சொந்த கூரைகள் மேலும் முற்றங்களிலும் கூடாரங்களை அமைத்துக்கொண்டனர். ஆலயப் பிரகாரங்களிலும், தண்ணீர் வாசல் அருகிலுள்ள திறந்த வெளியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள். இவ்வாறு சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேல் ஜனங்களின் குழு முழுவதும் கூடாரங்களைப் போட்டார்கள். அவர்கள் அமைத்த கூடாரங்களிலேயே அவர்கள் குடி இருந்தார்கள். நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள் முதல் அந்நாள்வரை இஸ்ரவேல் ஜனங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையை இவ்வாறு கொண்டாடவில்லை. ஒவ்வொருவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். விழாவின் ஒவ்வொரு நாளும் சட்டப் புத்தகத்தில் இருந்து எஸ்றா வாசித்தான். விழாவின் முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை எஸ்றா சட்டப் புத்தகத்தை வாசித்தான். இஸ்ரவேல் ஜனங்கள் இவ்விழாவை ஏழு நாட்கள் கொண்டாடினார்கள். பிறகு எட்டாவது நாள் ஜனங்கள் முறைப்படி ஒரு சிறப்புக் கூட்டத்திற்காகக் கூடினார்கள்.