ஆண்டின் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் ஒன்றாயிருந்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு தண்ணீர் வாசலுக்கு முன்னால் திறந்தவெளியில் அனைவரும் கூடினார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் எஸ்றா எனும் வேதபாரகனிடம் மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டார்கள். அதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட சட்டப் புத்தகம். எனவே, ஆசாரியனான எஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப்புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர்.
எஸ்றா மரத்தால் ஆன மேடையின் மேல் நின்றான். அது இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்தது. எஸ்றாவின் வலது புறத்தில் மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், நின்றனர். அவனது இடது புறத்தில் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள்.
எனவே எஸ்றா புத்தகத்தைத் திறந்தான். ஜனங்கள் எல்லோரும் அவனைப் பார்க்க முடிந்தது. ஏனென்றால் அவன் உயர்ந்த மேடையில் நின்றுக்கொண்டிருந்தான். எஸ்றா சட்ட புத்தகத்தைத் திறந்ததும் ஜனங்கள் எல்லாரும் எழுந்து நின்றனர். எஸ்றா உன்னத தேவனாகிய கர்த்தரைத் துதித்தான். ஜனங்கள் அனைவரும் தங்கள் கைகளை உயர்த்தி அதற்கு மறுமொழியாக “ஆமென்! ஆமென்!” என்று சொன்னார்கள். பிறகு ஜனங்கள் அனைவரும் குனிந்து முகங்குப்புற விழுந்து கர்த்தரை தொழுதுகொண்டார்கள்.
லேவியர் கோத்திரத்திலுள்ள இம்மனிதர்கள் அங்கே நின்றுக்கொண்டிருந்த ஜனங்களிடம் சட்டத்தைப் பற்றி ஜனங்களுக்குப் புரியும்படிச் செய்தனர். அவர்கள் யெசுவா, பானி, செரேபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா ஆகியோர்களாவார்கள். அந்த லேவியர்கள் தேவனுடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். அவர்கள் அதனைப் புரியும்படிச் செய்தனர். அதன் பொருளையும் விளக்கினார்கள். அவர்கள் இதனைச் செய்ததால் ஜனங்கள் வாசிக்கப்பட்டது என்னவென்று புரிந்துக்கொண்டனர்.
பிறகு ஆளுநராகிய நெகேமியா, ஆசாரியனுமான, வேதபாரகனாகிய எஸ்றா மற்றும் ஜனங்களுக்குப் போதித்த லேவியர்களும் ஜனங்களிடம், “இந்நாள் சிறப்புக்குரிய நாளாக உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உள்ளது. எனவே துக்கப்படவும் அழவும் வேண்டாம்” என்றனர். ஏனென்றால் ஜனங்கள் தேவனுடையச் செய்திகளைச் சட்டத்தில் கேட்டதும் அழுதனர்.