அவ்விடத்தைவிட்டு இயேசு தன் சொந்த ஊருக்குக் கிளம்பினார். அவரது சீஷர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றனர். ஓய்வு நாளானபோது ஜெப ஆலயத்தில் இயேசு உபதேசம் செய்ய ஆரம்பித்தார். நிறைய மக்கள் அதனைக் கேட்டு வியப்புற்றனர். அவர்கள் “இந்த மனிதர் இந்த உபதேசங்களை எங்கே இருந்து பெற்றார்? இந்த அறிவை எப்படிப் பெற்றார்? இவருக்கு இதனை யார் கொடுத்தது? அற்புதங்களைச் செய்யும் அதிகாரத்தை எங்கிருந்து பெற்றார்? இவர் ஒரு தச்சன் மட்டும்தானே. இவருடைய தாய் மரியாள் அல்லவா! இவர் யாக்கோபு, யோசே, சீமோன் ஆகியோரின் சகோதரர் அல்லவா. இவரது சகோதரிகள் நம்முடன் தானே இருக்கிறார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தனர். இயேசு மக்களைப் பார்த்து, “ஒரு தீர்க்கதரிசியை மற்ற மக்களே மரியாதை செய்வர். ஆனால் அவர் சொந்த ஊரில் சொந்த மக்களிடம் சொந்த வீட்டில் மரியாதை பெறுவதில்லை” என்றார். இயேசு அந்த ஊரில் அதிக அளவில் அற்புதங்களைச் செய்ய இயலவில்லை. அவர் நோயுற்ற சிலரின் மேல் தன் கையை வைத்து குணமாக்கும் சில செயல்களை மட்டுமே செய்தார். அங்குள்ள மக்களுக்கு விசுவாசம் இல்லாதது பற்றி இயேசு மிகவும் ஆச்சரியப்பட்டார். பிறகு இயேசு அந்தப் பகுதியில் உள்ள மற்ற கிராமங்களுக்கும் போய் உபதேசம் செய்தார். அவர் தனது பன்னிரண்டு சீஷர்களையும் ஒன்றாக அழைத்தார். அவர்களை இரண்டிரண்டு பேராக வெளியே அனுப்பினார். அசுத்த ஆவிகளின் மேல் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார். அவர் தன் சீஷர்களிடம், “உங்கள் பயணத்துக்கு எதுவும் எடுத்துச் செல்ல வேண்டாம். நடந்து செல்ல வசதியாக ஒரு கைத்தடியை மட்டும் எடுத்துச் செல்லுங்கள். உணவையோ, பையையோ, கச்சைகளில் பணத்தையோ எடுத்துச் செல்ல வேண்டாம். செருப்பை அணிந்து கொள்ளுங்கள். ஆடை மட்டும் அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும், அந்த ஊரை விட்டு நீங்கும்வரை அங்கேயே தங்கி இருங்கள். எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ அல்லது உங்கள் உபதேசங்களைக் கேட்க மறுத்தாலோ அந்த ஊரைவிட்டு விலகுங்கள். உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியையும் அங்கேயே உதறிவிட்டுச் செல்லுங்கள். அவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என்றார். சீஷர்கள் அந்த இடத்தை விட்டு விலகிப் பல இடங்களுக்கும் சென்றனர். அவர்கள் மக்களிடம் உபதேசம் செய்தனர். தங்கள் மனதையும், வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுமாறு போதித்தனர். அவர்கள் பல பிசாசுகளை மக்களிடமிருந்து விரட்டினர். அவர்கள் நோயுற்ற மனிதர்களுக்கு ஒலிவ எண்ணெயைத் தடவிக் குணப்படுத்தினர். இயேசு பிரபலமானபடியால் ஏரோது மன்னன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். சில மக்கள், “இயேசுதான் யோவான் ஸ்நானகன். அவன் மரணத்தில் இருந்து எழுந்திருக்கிறான். அதனால்தான் அவரால் இது போன்ற அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்றனர். இன்னும் சிலர், “இவர்தான் எலியா” என்றனர். மேலும் சிலரோ, “இயேசு ஒரு தீர்க்கதரிசி. இதற்கு முன்னால் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளைப்போன்று இவரும் ஒருவர்” என்று சொல்லிக்கொண்டனர். இயேசுவைப் பற்றிய இது போன்ற பல செய்திகளை ஏரோது அறிந்து கொண்டான். அவன், “நான் யோவானின் தலையை வெட்டிக் கொன்றுவிட்டேன். இப்போது யோவான் மரணத்தில் இருந்து எழுந்துவிட்டான்” என்று சொன்னான். ஏரோது தன் வீரர்களுக்கு யோவானைக் கைது செய்யுமாறு ஆணையிட்டான். அவனைச் சிறையில் அடைத்தான். தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். அவள் பெயரே ஏரோதியாள். இவள் முதலில் ஏரோதுவின் சகோதரனான பிலிப்புவின் மனைவியாக இருந்தாள். ஆனால் அவளைப் பின்னர் ஏரோது மணந்துகொண்டான். ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்துகொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான். எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை யோவானை கொல்ல ஏரோது பயந்தான். யோவான் ஒரு நல்ல பரிசுத்தமான மனிதன் என்று மக்கள் நம்புவதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஏரோது யோவானைக் காப்பாற்றி வந்தான். யோவானின் போதகத்தைக் கேட்பதில் ஏரோது பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அவனது போதகம் ஏரோதை உறுத்தியது. பிறகு யோவானைக் கொல்வதற்குப் பொருத்தமான வாய்ப்பு ஒன்று ஏரோதியாளுக்குக் கிடைத்தது. இது ஏரோதின் பிறந்த நாளன்று நிகழ்ந்தது. தன் பிறந்த நாளன்று ஏரோது மிக முக்கியமான அரசு அதிகாரிகளுக்கும், மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளுக்கும், கலிலேயாவின் பெரிய மனிதருக்கும் விருந்து கொடுத்தான்.
வாசிக்கவும் மாற்கு எழுதிய சுவிசேஷம் 6
கேளுங்கள் மாற்கு எழுதிய சுவிசேஷம் 6
பகிர்
அனைத்து மொழியாக்கங்களையும் ஒப்பிடவும்: மாற்கு எழுதிய சுவிசேஷம் 6:1-21
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்