படகிலேறி இயேசு கடலின் அக்கரைக்குத் திரும்பிச் சென்றார். அக்கரையில் ஏராளமான மக்கள் கடற்கரையிலிருக்கும்போது இயேசுவைச் சுற்றிக் கூடினர். அப்பொழுது, ஜெப ஆலயத் தலைவர்களுள் ஒருவன் அங்கு வந்தான். அவன் பெயர் யவீரு. அவன் இயேசுவைப் பார்த்ததும் அவரைப் பணிவுடன் குனிந்து வணங்கினான். அவன் இயேசுவை மேலும், மேலும் பணிந்தான். அவன் “என்னுடைய சின்ன குமாரத்தி செத்துக்கொண்டிருக்கிறாள். தயவுசெய்து அங்கு வந்து அவள் மீது உங்கள் கைகளை வைக்க வேண்டும். அதனால் அவள் குணம் பெற்று வாழ்வாள்” என்றான். ஆகையால் இயேசு அவனுடன் சென்றார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அவரை நெருக்கிக்கொண்டு சென்றனர். அம்மக்களின் நடுவில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்தாள். அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள். அவள் இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாள். ஆகையால் அவள் இயேசுவிடம் கூட்டத்திற்குள் வந்தாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டாள். அவளோ, “நான் அவரது ஆடையைத் தொட்டாலே போதும். நான் குணமாகிவிடுவேன்” என்று நம்பினாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள். இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை அறிந்தார். எனவே, அவர் நின்று சுற்றிலும் பார்த்தார். பிறகு அவர், “என் ஆடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார். இதனைக் கேட்டதும் சீஷர்கள் “போதகரே, ஏராளமான மக்கள் உங்களை நெருக்கிக்கொண்டு வருகிறார்கள். ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீரே” என்றனர். ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண்ணும் தான் முழுமையாகக் குணம் பெற்றதை உணர்ந்தாள். எனவே அவள் இயேசுவின் முன்வந்து அவரைப் பணிந்தாள். அவள் பயத்தால் நடுங்கினாள். அவள் தன் கதை முழுவதையும் இயேசுவிடம் கூறினாள். இயேசு அவளிடம், “அன்பான பெண்ணே! உன் விசுவாசத்தினால் நீ சுகமானாய். சமாதானமாகச் செல். இனி மேல் உனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றார். இவ்வாறு இயேசு அங்கே பேசிக்கொண்டிருந்தபோது யவீருவின் வீட்டிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் யவீருவிடம், “ஐயா, உங்கள் குமாரத்தி இறந்துபோனாள். எனவே, இனிமேல் இந்தப் போதகருக்கு (இயேசுவுக்கு) எந்தத் தொந்தரவும் கொடுக்க வேண்டாம்” என்றனர். அந்த மக்கள் சொன்னதைப்பற்றி இயேசு கவலைப்படவில்லை. அந்த ஜெப ஆலயத்தலைவரிடம் இயேசு, “பயப்பட வேண்டாம். விசுவாசத்துடன் இரு” என்று கூறினார். மற்ற அனைவரையும் விட்டு பேதுரு, யாக்கோபு, யாக்கோபுவின் சகோதரனான யோவான் ஆகியோரை மட்டும் தன்னுடன் வர இயேசு அனுமதித்தார். இயேசு இம்மூன்று சீஷர்களோடு மட்டும் யவீருவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு நிறையப்பேர் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். அந்த இடம் ஒரே குழப்பமாய் இருந்தது. இயேசு அவ்வீட்டுக்குள் நுழைந்து அவர்களிடம், “ஏன் நீங்கள் இவ்வளவு அழுது சத்தமிடுகிறீர்கள்? இக்குழந்தை சாகவில்லை. இது தூங்கிக் கொண்டுள்ளது” என்றார். இதைக்கேட்ட மக்கள் இயேசுவைப் பார்த்து சிரித்தார்கள். இயேசு அம்மக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் அக்குழந்தை கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் சென்றார். அவர் தன்னோடு அக்குழந்தையின் தாய், தந்தை, மூன்று சீஷர்கள் ஆகியோரை மட்டும் அனுமதித்தார். அவர் அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக்கொண்டு, “ தலீத்தாகூமி! ” என்று சொன்னார். (அதற்கு, “சிறுமியே, நான் சொல்கிறேன் நீ எழுந்திரு” என்று பொருள்.) அச்சிறு பெண்ணும் உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு அப்போது பன்னிரண்டு வயது. அப்பெண்ணின் தாயும், தந்தையும், சீஷர்களும் வியப்படைந்தனர். இயேசு அப்பெண்ணின் பெற்றோரிடம் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினார். பிறகு அப்பெண்ணுக்கு உண்ண உணவு அளிக்குமாறு சொன்னார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் மாற்கு எழுதிய சுவிசேஷம் 5
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: மாற்கு எழுதிய சுவிசேஷம் 5:21-43
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்