மாற்கு எழுதிய சுவிசேஷம் 1:29-38

மாற்கு எழுதிய சுவிசேஷம் 1:29-38 TAERV

இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள். சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள். அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள். மக்கள் அவரிடம் அவளைப்பற்றிக் கூறினர். எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள். அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர். அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன. மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். பிறகு சீமோனும் அவனது நண்பர்களும் இயேசுவைத் தேடிச் சென்றனர். அவரைக் கண்டுபிடித்து, “மக்கள் யாவரும் உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர். இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார்.

தொடர்புடைய காணொளிகள்