மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:27-56

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:27-56 TAERV

பின்னர் பிலாத்துவின் வீரர்கள் இயேசுவை பிலாத்துவின் அரண்மனைக்குள் கொண்டு வந்தார்கள். எல்லா வீரர்களும் இயேசுவைச் சுற்றிக்கொண்டு அவரது ஆடைகளைக் கழற்றி ஒரு சிவப்பு மேலங்கியை அணிவித்தார்கள். வீரர்கள் முட்களால் ஒரு கிரீடம் செய்து அதை இயேசுவின் தலையில் சூட்டினார்கள். அவரது வலது கையில் ஒரு தடியைக் கொடுத்தார்கள். பின்னர் அவ்வீரர்கள் இயேசுவின் முன்னால் குனிந்து கேலி செய்தார்கள், “வணக்கம் யூதர்களின் ராஜாவே” என்றார்கள். அவர் முகத்தில் காறி உமிழ்ந்தார்கள். பின்னர் அவரது கையிலிருந்த தடியை வாங்கி அவரது தலையில் பல முறை அடித்தார்கள். இயேசுவை அவர்கள் கேலி செய்து முடித்ததும், சிவப்பு மேலங்கியை நீக்கியபின் அவரது ஆடைகளை அணிவித்தார்கள். பின்னர் சிலுவையில் அறைந்து கொல்வதற்காக இயேசுவை வீரர்கள் அழைத்துச் சென்றார்கள். போர்வீரர்கள் இயேசுவுடன் நகரை விட்டு வெளியில் சென்று கொண்டிருந்தார்கள். சிரேனே என்னுமிடத்திலிருந்து வந்த சீமோன் என்பவனை இயேசுவுக்காக சிலுவையைச் சுமந்துவர போர்வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள். மண்டை ஓட்டின் இடம் என்னும் பொருள்படும் கொல்கொதா என்று அழைக்கப்படுமிடத்திற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். அங்கு வலியை மறக்கச்செய்யும் மருந்து கலந்த பானத்தை இயேசுவுக்குக் கொடுத்தார்கள். அதைச் சுவைத்த இயேசு அதைக் குடிக்க மறுத்தார். போர் வீரர்கள் இயேசுவை சிலுவையில் ஆணிகளை வைத்து அறைந்தார்கள். யார் இயேசுவின் ஆடைகளைப் பெறுவது என்பதை சீட்டுப் போட்டு முடிவு செய்தார்கள். போர்வீரர்கள் அங்கு உட்கார்ந்து இயேசுவை கவனித்துக்கொண்டிருந்தார்கள். இயேசுவின் தலைக்கு மேல் ஒரு அறிவிப்பு பலகையை அவர்கள் அறைந்தார்கள். அதில் “இவர் இயேசு, யூதர்களின் ராஜா” என்று எழுதியிருந்தது. இயேசுவின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு கொள்ளைக்காரர்கள் சிலுவையில் அறையப்பட்டார்கள். மக்கள் இயேசுவின் அருகில் நடந்துச்சென்று அவரைத் திட்டினார்கள். தலையைக் குலுக்கியபடி மக்கள் கூறினார்கள், “தேவாலயத்தை இடித்து மூன்று நாட்களில் மீண்டும் கட்ட முடியும் எனக் கூறினாயே! உன்னை நீயே காப்பாற்றிக்கொள்! நீ தேவனின் குமாரன் என்பது உண்மையானால், சிலுவையிலிருந்து இறங்கி வா!” என்றனர். தலைமை ஆசாரியர், வேதபாரகர் மற்றும் மூத்த யூதத்தலைவர்கள் ஆகிய அனைவரும் அங்கிருந்தனர். மக்கள் செய்தது போலவே அவர்களும் இயேசுவைக் கேலி செய்தார்கள். அவர்கள், “இவன் மற்றவர்களைக் காப்பாற்றினான்! ஆனால் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை! இவனை (இஸ்ரவேலின்) யூதர்களின் ராஜா என்று மக்கள் கூறுகிறார்கள். இவன் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து கீழே இறங்கி வரவேண்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். இவன் தேவனை நம்பினான். எனவே தேவன் விரும்பினால் இவனைக் காப்பாற்றட்டும் ‘நான் தேவ குமாரன்’ என இவன் கூறினான்” என்றார்கள். அவ்வாறாகவே, இயேசுவின் இருபக்கமும் சிலுவையில் அறையப்பட்ட கொள்ளைக்காரர்களும் அவரை நிந்தனை செய்தனர். நடுப்பகலில் நாடு முழுவதும் இருண்டது. இருள் மூன்று மணி நேரம் தொடர்ந்தது. சுமார் மூன்று மணியளவில் இயேசு உரத்த குரலில் “ ஏலி, ஏலி, லாமா சபக்தானி ” என்று கதறினார். இதன் பொருள், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும். அங்கு நின்றிருந்த சிலர் இதைக் கேட்டார்கள். அவர்கள், “அவன் எலியாவை அழைக்கிறான்” என்றார்கள். உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடல் பஞ்சைக் கொண்டுவந்தான். அதைப் புளிப்பான பானத்தில் தோய்த்து குச்சியில் கட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். ஆனால் மற்றவர்கள், “அவனைத் தொந்தரவு செய்யாதே. எலியா அவனைக் காப்பாற்ற வருவானா என்பதைக் காணவேண்டும்” என்றார்கள். மீண்டும் இயேசு ஒரு முறை சத்தமிட்டுக் கதறினார். பின்னர், இயேசுவின் ஆவி பிரிந்தது. இயேசு இறந்தபொழுது, தேவாலயத்திலிருந்த திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. கிழிசல் திரைச்சீலையின் மேலிருந்துத் துவங்கி கீழே வரைக்கும் வந்தது. மேலும், நிலம் நடுங்கியது. பாறைகள் நொறுங்கின. கல்லறைகள் அனைத்தும் திறந்தன. தேவனுடைய மனிதர்கள் பலர் மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்கள். கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள். இயேசுவுக்குக் காவலிருந்த படைத் தலைவனும் போர்வீரர்களும் நில நடுக்கம் ஏற்பட்டதையும் நடந்த நிகழ்ச்சிகளையும் கண்டார்கள். மிகவும் பயந்துபோன அவர்கள், “இவர் உண்மையிலேயே தேவகுமாரன்தான்” என்றார்கள். பெண்கள் பலரும் சிலுவைக்குத் தொலைவில் நின்று கவனித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலிலேயாவிலிருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த பெண்கள். மகதலேனா மரியாள், யாக்கோபு மற்றும் யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாள் மற்றும் யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாயும் இருந்தார்கள்.

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:27-56 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்