மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:11-26

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:11-26 TAERV

இயேசு ஆளுநரான பிலாத்துவின் முன்னால் நின்றார். பிலாத்து இயேசுவிடம் பல கேள்விகள் கேட்டான், “யூதர்களின் இராஜன் நீர்தானா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நானே தான்” என்றார். தலைமை ஆசாரியர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவைக் குற்றம் சுமத்தியபொழுது, அவர் எதுவும் கூறவில்லை. ஆகவே பிலாத்து இயேசுவிடம், “இவர்கள் உன்மீது சுமத்திய இத்தனை குற்றச் சாட்டுகளையும் கேட்டாயல்லவா? நீ ஏன் பதில் சொல்லக் கூடாது?” என்றான். ஆனால், இயேசு பிலாத்துவிற்கு பதில் ஏதும் கூறவில்லை. அதைக்கண்டு பிலாத்து மிகவும் வியப்படைந்தான். ஒவ்வொரு வருடமும் பஸ்கா பண்டிகையின் போது சிறையிலிருந்து ஒருவரை ஆளுநர் விடுவிப்பது வழக்கம். மக்கள் விரும்பும் ஒருவரை விடுவிப்பது வழக்கம். அப்பொழுது துன்மார்க்கனான ஒருவன் சிறையிலிருந்தான். அவன் பெயர் பரபாஸ். பிலாத்துவின் வீட்டிற்கு முன் மக்கள் கூடினார்கள். பிலாத்து மக்களைப் பார்த்து, “உங்களுக்காக ஒருவனை விடுதலை செய்கிறேன். நீங்கள் யாரை விடுவிக்க விரும்புகிறீர்கள். பரபாஸையா அல்லது கிறிஸ்து எனப்படும் இயேசுவையா?” என்றான். பொறாமை கொண்டே மக்கள் தன்னிடம் இயேசுவை ஒப்படைத்துள்ளார்கள் என்பதை பிலாத்து அறிந்தான். நீதி வழங்கும் இடத்தில் அமர்ந்து பிலாத்து இவற்றைக் கூறினான். அப்பொழுது அவனது மனைவி ஒரு செய்தி அனுப்பினாள். அதில், “இயேசுவை எதுவும் செய்யாதீர்கள். அவர் குற்றமற்றவர். இன்று நான் அவரைப்பற்றி ஒரு கனவு கண்டேன். அது என்னை மிகவும் கலங்க வைத்தது” என்றிருந்தது. ஆனால், தலைமை ஆசாரியர்களும் மூத்த யூதத் தலைவர்களும் பரபாஸை விடுதலை செய்யவும் இயேசுவைக் கொல்ல வேண்டுமெனவும் கோரிக்கை வைக்க மக்களைத் தூண்டினார்கள். பிலாத்து, “என்னிடம் பரபாசும், இயேசுவும் உள்ளார்கள். யாரை விடுவிக்க நீங்கள் விரும்பு கிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு மக்கள், “பரபாஸ்” என்று சொன்னார்கள். “அப்படியானால் கிறிஸ்து எனப்படும் இயேசுவை என்ன செய்வது?” என்று பிலாத்து கேட்டான். “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று மக்கள் சொன்னார்கள். “அவரை ஏன் கொல்ல விரும்புகிறீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?” என்று பிலாத்து மக்களைக் கேட்டான். ஆனால் மக்கள் அனைவரும், “அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமாய் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். மக்களை மாற்றத் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்பதைப் பிலாத்து கண்டான். மேலும் மக்கள் பொறுமையிழப்பதையும் பிலாத்து கவனித்தான். ஆகவே தண்ணீரை எடுத்து மக்கள் எல்லோரும் காணுமாறு தன் கைகளைக் கழுவினான். பின்பு, “இவரது மரணத்திற்கு நான் பொறுப்பல்ல. நீங்களே அதைச் செய்கிறீர்கள்” என்று பிலாத்து கூறினான். “அவரது மரணத்திற்கு நாங்களே பொறுப்பு. அவரது மரணத்திற்கான தண்டனையை எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்குமாக நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று மக்கள் அனைவரும் கூறினார்கள். பின் பிலாத்து பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவைச் சாட்டையால் அடிக்குமாறு பிலாத்து சில வீரர்களிடம் கூறினான். பிறகு சிலுவையில் அறைந்து கொல்வதற்கு வீரர்களிடம் இயேசுவை ஒப்படைத்தான்.

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 27:11-26 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்