அவர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த பொழுது, இயேசு சிறிது அப்பத்தைக் கையிலெடுத்தார். அந்த அப்பத்துக்காக தேவனுக்கு நன்றி கூறி அதைப் பங்கிட்டார். அதைத் தம் சீஷர்களுக்கு கொடுத்து, “இந்த அப்பத்தை எடுத்து சாப்பிடுங்கள். இந்த அப்பமே என் சரீரம்” என்று சொன்னார்.
பின் இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்து, அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். அதைத் தமது சீஷர்களுக்குக் கொடுத்த இயேசு, “நீங்கள் ஒவ்வொருவரும் இதைக் குடியுங்கள். இந்த திராட்சை இரசம் என் இரத்தம், என் இரத்தத்தின் மூலம் (மரணம்) தேவனுக்கும் மக்களுக்குமான புதிய உடன்படிக்கை துவங்குகிறது. இந்த இரத்தம் பலருக்கும் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்காக அளிக்கப்படுகிறது. நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், அதாவது, நாம் மீண்டும் என் பிதாவின் இராஜ்யத்தில் ஒன்று சேர்ந்து திராட்சை இரசத்தைப் புதியதாய் பானம் பண்ணும்வரைக்கும் நான் இதை அருந்தமாட்டேன்” என்று கூறினார்.
சீஷர்கள் அனைவரும் ஒரு பாடலைப் பாடினார்கள். பின்பு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.
இயேசு தம் சீஷர்களிடம், “இன்றிரவு நீங்கள் உங்கள் விசுவாசத்தை என்னிமித்தம் இழப்பீர்கள். வேதவாக்கியங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது:
“‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன்.
மந்தையின் ஆடுகள் கலைந்து ஓடும்’
என்று கூறினார்.
ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.
அதற்கு பேதுரு, “மற்ற எல்லாச் சீஷர்களும் தங்கள் விசுவாசத்தை இழக்கலாம். ஆனால், ஒரு போதும் என் விசுவாசத்தை இழக்கமாட்டேன்” என்று கூறினான்.
அதற்குப் இயேசு, “நான் உண்மையை சொல்லுகிறேன், இன்றிரவு உனக்கு என்னைத் தெரியாது எனக் கூறுவாய். அதுவும் சேவல் கூவுவதற்குமுன் மூன்று முறை சொல்வாய்” என்று கூறினார்.
ஆனால், பேதுரு, “உம்மை எனக்குத் தெரியாது எனக் கூறவேமாட்டேன். உம்முடன் சேர்ந்து நானும் இறப்பேன்!” என்றான். மேலும் மற்ற சீஷர்கள் அனைவரும் அவ்வாறே கூறினார்கள்.
பின்பு இயேசு தம் சீஷர்களுடன் கெத்செமனே என்ற இடத்திற்குச் சென்றார். அவர் தம் சீஷர்களிடம், “நான் அங்கே சென்று பிரார்த்தனை செய்யும்வரைக்கும் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்றார். பேதுருவையும், செபதேயுவின் இரு குமாரர்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார். இயேசு பேதுருவிடமும், செபதேயுவின் இரு குமாரர்களிடமும், “என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்துள்ளது. என் இதயம் துக்கத்தினால் உடைந்துள்ளது. என்னுடன் இங்கேயே விழித்திருந்து காத்திருங்கள்” என்றார்.
பின் இயேசு அவர்களை விட்டு சிறிது தூரம் சென்றார். பின்பு இயேசு நிலத்தில் முகம்படிய விழுந்து பிரார்த்தித்தார், “என் பிதாவே, முடியுமானால் இந்த வேதனைகள் எனக்கு ஏற்படாமல் செய்யும். ஆனால், உமக்கு விருப்பமானதையே செய்யும். நான் விரும்புவதையல்ல” என்றார். பிறகு தம் சீஷர்களிடம் இயேசு திரும்பி வந்தார். தம் சீஷர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்ட இயேசு, பேதுருவிடம் கூறினார், “ஒருமணி நேரம் என்னுடன் விழித்திருக்க உங்களால் முடியவில்லையா? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் ஆவி சரியானதைச் செய்ய விரும்புகிறது. ஆனால் உங்கள் சரீரமோ பலவீனமாக உள்ளது” என்றார்.
இயேசு இரண்டாவது முறையாக சென்று பிரார்த்தனை செய்தார், “என் பிதாவே, வேதனை மிகுந்த இக்காரியங்கள் எனக்கு ஏற்படாதிருக்குமாறு செய்ய முடியாதெனில், நீர் விரும்பியபடியே நடக்க நான் வேண்டுகிறேன்” என்றார்.
பின்பு இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்றார். மீண்டும் அவர்கள் தூக்கத்திலிருப்பதைக் கண்டார். அவர்களது கண்கள் மிகவும் களைப்புடன் காணப்பட்டன. ஆகவே மீண்டும் ஒருமுறை இயேசு அவர்களை விட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். மூன்றாவது முறையும் அதையேக் கூறினார்.
பின் இயேசு தம் சீஷர்களிடம் திரும்பிச் சென்று அவர்களிடம், “இன்னுமா நீங்கள் தூங்கிக் கொண்டும் இளைப்பாறிக் கொண்டுமிருக்கிறீர்கள்? மனித குமாரனைப் பாவிகளிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. எழுந்திருங்கள்! நாம் போக வேண்டும். இதோ வந்துவிட்டான் என்னை எதிரிகளிடம் காட்டிக் கொடுக்கப் போகிறவன்” என்றார்.
இப்படிப் பேசிக்கொண்டிருந்தபொழுதே யூதாஸ் அங்கு வந்தான், யூதாஸ் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன். அவனுடன் பலரும் இருந்தனர். அவர்கள் தலைமை ஆசாரியனாலும் மூத்த தலைவர்களாலும் அனுப்பப்பட்டவர்கள். யூதாஸூடன் இருந்தவர்கள் அரிவாள்களையும் தடிகளையும் வைத்திருந்தனர். யார் இயேசு என்பதை அவர்களுக்குக் காட்ட யூதாஸ் ஒரு திட்டமிட்டிருந்தான். அவன் அவர்களிடம், “நான் முத்தமிடுகிறவரே இயேசு. அவரைக் கைது செய்யுங்கள்” என்றான். அதன்படி யூதாஸ் இயேசுவிடம் சென்று, “வணக்கம். போதகரே!” என்று கூறி இயேசுவை முத்தமிட்டான்.
இயேசு, “நண்பனே, நீ செய்ய வந்த காரியத்தை செய்” என்று கூறினார்.
பின் யூதாஸூடன் வந்த மனிதர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டார்கள். அவரைக் கைது செய்தார்கள்.