மத்தேயு எழுதிய சுவிசேஷம் 26:17-30

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 26:17-30 TAERV

புளிப்பில்லாத அப்பம் உண்ணும் பண்டிகையின் முதல் நாளன்று, சீஷர்கள் இயேசுவிடம் வந்து, “பஸ்கா விருந்துண்ண உமக்காக ஏற்பாடுகளைச் செய்யக் காத்திருக்கிறோம். எங்கே உணவுக்கு ஏற்பாடு செய்ய விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். அவர்களுக்கு மறுமொழியாக இயேசு, “நகருக்குள் செல்லுங்கள். அங்கே எனக்கு அறிமுகமான ஒருவரிடம் சென்று, போதகர் கூறுவதாகக் கூறுங்கள், ‘குறிக்கப்பட்ட வேளை நெருங்கிவிட்டது. நான் என் சீஷர்களுடன் உன் வீட்டில் பஸ்கா விருந்துண்பேன்’, என்று கூறுங்கள்” என்று கூறினார். இயேசுவின் சீஷர்கள் அவரது சொற்படியே அவர் சொன்னவற்றைச் செய்தார்கள். அவர்கள் பஸ்கா விருந்தைத் தயார் செய்தார்கள். அன்று மாலை இயேசுவும் அவரது பன்னிரண்டு சீஷர்களும் மேஜையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு கூறினார், “உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். உங்களில் ஒருவன் விரைவில் என்னை எதிரிகளிடம் பிடித்துக் கொடுப்பான்” என்றார். அதைக் கேட்ட சீஷர்கள் மிகவும் கவலையடைந்தார்கள். ஒவ்வொரு சீஷரும் இயேசுவிடம், “ஆண்டவரே, நிச்சமாய் அது நானல்ல!” என்றனர். அதற்கு இயேசு, “நான் கை கழுவும் பாத்திரத்திலேயே கை கழுவுகின்றவனே எனக்கு எதிராவான். மனித குமாரன் இறப்பார். இது நடக்குமென வேதவாக்கியம் சொல்கிறது. மனித குமாரனைக் கொல்வதற்குக் காட்டிக் கொடுக்கிறவனுக்கு மிகுந்த தீமை விளையும். அதைவிட அவன் பிறக்காமலேயே இருந்திருக்கலாம்” என்றார். பின் யூதாஸ் இயேசுவிடம், “போதகரே! நான் நிச்சயம் உங்களுக்கு எதிராகத் திரும்பமாட்டேன்!” என்றான். (இயேசுவை எதிரிகளிடம் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யூதாஸ் தான்) அதற்கு இயேசு, “இல்லை. நீ தான் என்னைக் காட்டிக் கொடுப்பாய்” என்றார். அவர்கள் உணவு அருந்திக்கொண்டிருந்த பொழுது, இயேசு சிறிது அப்பத்தைக் கையிலெடுத்தார். அந்த அப்பத்துக்காக தேவனுக்கு நன்றி கூறி அதைப் பங்கிட்டார். அதைத் தம் சீஷர்களுக்கு கொடுத்து, “இந்த அப்பத்தை எடுத்து சாப்பிடுங்கள். இந்த அப்பமே என் சரீரம்” என்று சொன்னார். பின் இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்து, அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். அதைத் தமது சீஷர்களுக்குக் கொடுத்த இயேசு, “நீங்கள் ஒவ்வொருவரும் இதைக் குடியுங்கள். இந்த திராட்சை இரசம் என் இரத்தம், என் இரத்தத்தின் மூலம் (மரணம்) தேவனுக்கும் மக்களுக்குமான புதிய உடன்படிக்கை துவங்குகிறது. இந்த இரத்தம் பலருக்கும் தங்கள் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்காக அளிக்கப்படுகிறது. நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன், அதாவது, நாம் மீண்டும் என் பிதாவின் இராஜ்யத்தில் ஒன்று சேர்ந்து திராட்சை இரசத்தைப் புதியதாய் பானம் பண்ணும்வரைக்கும் நான் இதை அருந்தமாட்டேன்” என்று கூறினார். சீஷர்கள் அனைவரும் ஒரு பாடலைப் பாடினார்கள். பின்பு அவர்கள் ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்