மத்தேயு எழுதிய சுவிசேஷம் 26:1-13

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 26:1-13 TAERV

இவை அனைத்தையும் சொல்லி முடித்த இயேசு, தம் சீஷர்களை நோக்கி, “நாளைக்கு மறுநாள் பஸ்கா பண்டிகை என்பதை அறிவீர்கள். அன்றையதினம் மனிதகுமாரன் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்காக எதிரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்” என்று கூறினார். தலைமை ஆசாரியரும் வேதபாரகரும் தலைமை ஆசாரியன் வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். தலைமை ஆசாரியனின் பெயர் காய்பா. அக்கூட்டத்தில் இயேசுவைக் கைது செய்யத்தக்க வழியைத் தேடினார்கள். பொய் கூறி இயேசுவைக் கைது செய்து கொலை செய்ய திட்டமிட்டார்கள். அக்கூட்டத்தில் இருந்தவர்கள், “பஸ்கா நாளில் நாம் இயேசுவைக் கைதுசெய்ய முடியாது. மக்களுக்குக் கோபமூட்டி அதனால் கலவரம் ஏற்பட நமக்கு விருப்பமில்லை” என்று கூறினார்கள். இயேசு பெத்தானியாவில் இருந்தார். தொழுநோயாளியான சீமோன் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்பொழுது ஒரு பெண் அவரிடம் வந்தாள். அவளிடம் ஒரு வெள்ளைக் கல் ஜாடியில் நிறைய மிக விலையுயர்ந்த வாசனைத் தைலம் இருந்தது. அப்பெண் இயேசுவின் தலைமீது அவ்வாசனைத் தைலத்தை அவர் உணவு அருந்திக்கொண்டிருந்தபொழுது ஊற்றினாள். அப்பெண் இவ்வாறு செய்ததைக் கண்ட இயேசுவின் சீஷர்கள் அவள்மீது எரிச்சல் அடைந்தார்கள், “வாசனைத் தைலத்தை ஏன் வீணாக்குகிறாய்? அதை நல்ல விலைக்கு விற்றால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே?” என்று கடிந்து கொண்டார்கள். ஆனால் நடந்ததை அறிந்த இயேசு, “இப்பெண்ணை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? இவள் எனக்கு ஒரு நற்செயலைச் செய்திருக்கிறாள். ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன். வாசனைத் தைலத்தை என் தலைமீது ஊற்றி இப்பெண் நான் மரித்தப்பின் அடக்கம் செய்வதற்கான ஆயத்தத்தைச் செய்திருக்கிறாள். நான் உண்மையைச் சொல்லுகிறேன், உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்லப்படும். நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இப்பெண் செய்த செயலும் சொல்லப்படும். அப்பொழுது மக்கள் அவளை நினைவுகூர்வார்கள்” என்றார்.