மத்தேயு எழுதிய சுவிசேஷம் 25:21-30

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 25:21-30 TAERV

“அதற்கு எஜமானன், ‘நீ செய்தது சரி. நம்பிக்கையுள்ள நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிது பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய், மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்குகொள்!’ என்றான். “பின்னர் இரண்டு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் இரண்டு பை பணம் தந்தீர்கள். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டியுள்ளேன்’ என்றான். “அவனுக்கு எஜமான், ‘நீ செய்தது சரி. நீ நம்பிக்கைக்கு உரிய நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிய பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய். ஆகவே, மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்!’ என்றான். “பின் ஒரு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீர் மிகவும் கடினமானவர் என்பது எனக்குத் தெரியும். விதைக்காமலேயே அறுவடை செய்கிறவர் நீர். செடி நடவாமலேயே தானியங்களை சேர்க்கிறவர் நீர். எனவே, நான் பயம்கொண்டேன். நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீங்கள் தந்த ஒரு பை பணம்’ என்றான். “எஜமான் அவனை நோக்கி, ‘நீ ஒரு மோசமான சோம்பேறி வேலைக்காரன். நான் விதைக்காமலேயே அறுவடை செய்வதாகவும்; நடாமலேயே தானியங்களை சேகரிப்பதாகவும் கூறுகிறாய். எனவே நீ என் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான் திரும்பி வரும்பொழுது, என் பணமும் எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும்’ என்றான். “ஆகவே, எஜமானன், தன் மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து அந்த ஒரு பை பணத்தை வாங்கி அதை பத்து பை பணம் வைத்திருப்பவனிடம் கொடுங்கள். தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்துகிற ஒவ்வொருவனும் மேலும் அதிகம் பெறுவான். அவனுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகக் கிடைக்கும். ஆனால் தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்தாதவனிடமிருந்து அனைத்தும் பறிக்கப்படும்.’ என்றான். பிறகு அந்த எஜமானன், ‘பயனற்ற அந்த வேலைக்காரனைத் தூக்கி வெளியே இருளில் எறியுங்கள். அவ்விடத்தில் மக்கள் கூக்குரலிட்டு பற்களைக் கடித்துக் கொண்டு வேதனையால் அழுது கொண்டிருப்பார்கள்’ என்றான்.