மத்தேயு எழுதிய சுவிசேஷம் 21:1-11

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 21:1-11 TAERV

இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். ஒலிவ மலைக்கு அருகில் பெத்பகேயுவில் அவர்கள் முதலில் தங்கினார்கள். அங்கு இயேசு தமது சீஷர்களில் இருவரை அழைத்து நகருக்குள் செல்லப் பணித்தார். அவர்களிடம் இயேசு, “அங்கே தெரியும் நகருக்குள் செல்லுங்கள். நீங்கள் நகருக்குள் நுழையும்பொழுது கழுதை ஒன்றை கட்டிப் போடப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதனுடன் அதன் குட்டியையும் காண்பீர்கள். அவை இரண்டையும் அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். யாரேனும் உங்களை ஏன் கழுதைகளை கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம், ‘இக்கழுதைகள் ஆண்டவருக்குத் தேவையாயிருக்கின்றன. விரைவில் இவைகளைத் திருப்பி அனுப்புவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார். தீர்க்கதரிசி கீழ்க்கண்டவாறு சொன்னதின் முழுப்பொருளும் விளங்கும்படி இது நடந்தேறியது. “சொல்லுங்கள், சீயோன் நகர மக்களிடம், ‘இப்பொழுது உங்கள் மன்னவன் உங்களிடம் வருகிறார். பணிவானவர் அவர் கழுதையின் மேல் வருகிறார். ஆம் அவர் கழுதைக் குட்டியின் மேல் வருகிறார்’” இயேசு சொன்னபடியே அவரது சீஷர்கள் செய்தார்கள். அவர்கள் கழுதையையும் அதன் குட்டியையும் இயேசுவிடம் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலாடைகளைப் போட்டார்கள். இயேசு அவற்றின் மேல் அமர்ந்து எருசலேம் நகர் செல்லும் பாதையில் பயணமானார். ஏராளமான மக்கள் வழியெங்கும் தங்கள் மேலாடைகளை வழியில் பரப்பினார்கள். மற்றவர்கள் மரக்கிளைகளை வெட்டி வழியில் பரப்பினார்கள். சிலர் இயேசுவுக்கு முன்னால் நடந்தார்கள். மற்றவர்கள் அவருக்குப் பின்னே நடந்தார்கள். அவர்கள், “தாவீதின் குமாரனே வாழ்க! ‘கர்த்தரின் பெயரினால் வருகிறவரே வாழ்க! கர்த்தரால் ஆசீர்வதிக்கபட்டவரே, வாழ்க!’ “பரலோகத்திலுள்ள தேவனே வாழ்க!” என்றனர். பின்னர், இயேசு எருசலேம் நகருக்குள் சென்றார். நகரிலிருந்த அனைவரும் குழப்பமடைந்து, “யார் இந்த மனிதன்?” என்று வினவினார்கள். இயேசுவைத் தொடர்ந்து வந்த ஏராளமான மக்கள், “இவர்தான் இயேசு, கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்துள்ள தீர்க்கதரிசி” எனப் பதிலளித்தனர்.