மத்தேயு எழுதிய சுவிசேஷம் 13:1-23

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 13:1-23 TAERV

அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார். ஏராளமான மக்கள் அவரைச் சூழ்ந்தனர். எனவே இயேசு ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் ஏரிக்கரையோரம் அமர்ந்தார்கள். பிறகு உவமைகளின் மூலமாக இயேசு மக்களுக்குப் பலவற்றையும் போதித்தார். இயேசு, “ஒரு விவசாயி விதைகளை விதைக்கப் போனான். அவன் விதைகளைத் தூவியபோது, சில விதைகள் பாதையோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவை யாவற்றையும் தின்றுவிட்டன. சில விதைகள் பாறைகளின் மேல் விழுந்தன. அங்கு போதுமான அளவிற்கு மண் இல்லை. எனவே, விதைகள் வேகமாக முளைத்தன. ஆனால் சூரியன் உதித்ததும், அவை கருகிப்போயின. ஆழமான வேர்கள் இல்லாமையால் அச்செடிகள் காய்ந்தன. இன்னும் சில விதைகள் முட்புதர்களுக்கிடையில் விழுந்தன. களைகள் முளைத்து அந்த விதைகளின் செடிகள் வளராதவாறு தடுத்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அந்நிலத்தில், விதைகள் முளைத்து நன்கு வளர்ந்தன. சில செடிகள் நூறு மடங்கு தானியங்களைக் கொடுத்தன. சில அறுபது மடங்கும் சில முப்பது மடங்கும் தானியங்களைக் கொடுத்தன. நான் சொல்வதைக் கேட்கிறவர்களே, கவனியுங்கள்” என்று இயேசு கூறினார். இயேசுவின் சீஷர்கள் அவரிடம் வந்து, “மக்களுக்குப் போதனை செய்ய நீங்கள் ஏன் இந்த உவமைகளைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்டனர். இயேசு மறுமொழியாக, “பரலோக இராஜ்யத்தின் இரகசியங்களை நீங்கள் மட்டுமே அறிய முடியும். அவற்றை மற்றவர்கள் அறிய முடியாது. சிறிது புரிந்தவன் மேலும் விளக்கம் பெறுவான். தேவையானதை விடவும் அவனுக்கு அதிகம் கிடைக்கும். அதிகம் புரியாதவன், தான் அறிந்ததையும் இழப்பான். அதனால் தான் நான் மக்களுக்கு உவமைகளின் மூலம் போதனை செய்கிறேன். மக்கள் பார்க்கிறார்கள்; கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பார்ப்பதுமில்லை, புரிந்துகொள்வதுமில்லை. எனவே ஏசாயா தீர்க்கதரிசி இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொன்னது உண்மை என்பதை இம்மக்கள் காட்டுகிறார்கள்: “‘மக்களே! நீங்கள் கவனித்து கேட்பீர்கள். ஆனாலும் புரிந்துகொள்ளமாட்டீர்கள். மக்களே! நீங்கள் நோக்கி பார்ப்பீர்கள். ஆனாலும், நீங்கள் பார்ப்பதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள். ஆம், இறுகியிருக்கிறது இம்மக்களின் மனம். காதுகளிருந்தும் கேட்பதில்லை. உண்மையைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். தங்கள் காதால் கேளாதிருக்கவும் தங்கள் கண்ணால் பார்க்காதிருக்கவும் தங்கள் மனதால் அறியாதிருக்கவும் இவ்வாறு நடந்துள்ளது. குணம் பெற என்னிடம் வராதிருக்குமாறும் இவ்வாறு நடந்துள்ளது.’ ஆனால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். கண்களால் பார்ப்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். காதால் கேட்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். நான் உண்மையைச் சொல்லுகிறேன், பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் நீங்கள் இப்பொழுது காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் காணவில்லை. நீங்கள் இப்பொழுது கேட்பவற்றைக் கேட்பதற்குப் பல தீர்க்கதரிசிகளும் நல்லவர்களும் விரும்பினார்கள். ஆனால், அவர்கள் இவற்றைக் கேட்கவில்லை. “எனவே, விவசாயியைப் பற்றிய உவமையின் பொருளைக் கவனியுங்கள்: “சாலையின் ஓரம் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது பரலோக இராஜ்யத்தைப் பற்றிக் கேள்வியுற்றும் அதைப் புரிந்துகொள்ளாத மனிதனைக் குறிக்கிறது. அவனது மனதில் விதைக்கப்பட்டவற்றைச் சாத்தான் கவர்ந்துகொள்கிறான். “பாறைகளின் மேல் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டு உடனடியாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அவன் போதனைகளைத் தன் மனதில் ஆழமாகப் பதிய வைத்துத் கொள்வதில்லை. அவன் போதனைகளைத் தன் மனதில் குறைந்த காலத்திற்கே வைத்திருக்கிறான். போதனைகளை ஏற்றுக்கொண்டதினால் உபத்திரவமோ, துன்பமோ ஏற்படும்பொழுது, அவன் விரைவாக அதை விட்டு விடுகிறான். “முட்புதருக்கிடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது போதனைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையினால் போதனைகள் தன்னுள் நிலையாதிருக்கச் செய்பவனைக் குறிக்கிறது. எனவே, போதனைகள் அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை. “ஆனால், நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை போதனைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் நூறு மடங்கும் சில சமயம் அறுபது மடங்கும் சில சமயம் முப்பது மடங்கும் பலன் தருகிறான்” என்றார்.