லூக்கா எழுதிய சுவிசேஷம் 8:1-21

லூக்கா எழுதிய சுவிசேஷம் 8:1-21 TAERV

மறுநாள் இயேசு சில பெரிய பட்டணங்களுக்கும், சில சிறு நகரங்களுக்கும் பிரயாணம் செய்தார். தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு கூறி மக்களுக்குப் போதித்தார். பன்னிரண்டு சீஷர்களும் அவரோடு கூட இருந்தனர். சில பெண்களும் அவரோடு கூட இருந்தனர். இயேசு இந்தப் பெண்களை நோய்களில் இருந்தும் பிசாசின் அசுத்த ஆவிகளில் இருந்தும் குணமாக்கி இருந்தார். இப்பெண்களுள் ஒருத்தி மரியாள். அவள் மக்தலா என்னும் நகரத்திலிருந்து வந்திருந்தாள். ஏழு அசுத்த ஆவிகள் அவளிடமிருந்து விரட்டப்பட்டிருந்தன. இப்பெண்களோடுகூட கூசாவின் (ஏரோதுவின் பொருளாளர்களுள் ஒருவனாக இருந்தவன்) மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும் வேறுபல பெண்களும் இருந்தனர். இயேசுவுக்கும் அவருடைய சீஷர்களுக்கும் இவர்கள் தங்கள் பணத்தின் மூலம் சேவை செய்தனர். கூட்டமாகப் பலர் சேர்ந்து வந்தனர். ஒவ்வொரு நகரத்திலிருந்தும் மக்கள் இயேசுவிடம் வந்தனர். இயேசு பின்வரும் உவமையை மக்களுக்குக் கூறினார். “ஓர் உழவன் விதை விதைப்பதற்குச் சென்றான். உழவன் விதைத்துக்கொண்டிருந்தபோது, பாதையின் ஓரமாகச் சில விதைகள் விழுந்தன. மக்கள் அவற்றின்மீது நடந்து சென்றனர். பறவைகள் அவற்றைத் தின்றன. சில விதைகள் பாறையின்மீது விழுந்தன. அவை முளைக்க ஆரம்பித்தன. நீர் இல்லாததால் மடிந்தன. முட்புதர்கள் நடுவே சில விதைகள் விழுந்தன. அவை முளைத்தன. ஆனால் பின்னர், அவை முளைக்காதபடி புதர்கள் தடுத்தன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து நூறு மடங்கு தானியத்தைத் தந்தன.” இயேசு இந்த உவமையைக் கூறி முடித்தார். பின்பு இயேசு, “நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற மக்களே, கவனியுங்கள்” என்றார். இயேசுவின் சீஷர்கள் அவரை நோக்கி, “இந்த உவமையின் பொருள் என்ன?” என்று கேட்டனர். இயேசு, “தேவனுடைய இராஜ்யத்தைப்பற்றிய இரகசியங்களை அறிந்துகொள்ள நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். ஆனால், நான் பிற மக்களோடு பேசுவதற்கு உவமைகளைப் பயன்படுத்துகிறேன். நான் இவ்வாறு செய்வது ஏனென்றால்: “‘அவர்கள் பார்ப்பார்கள், ஆனால் எதையும் காணமாட்டார்கள். அவர்கள் கவனிப்பார்கள்: ஆனால் எதையும் புரிந்துகொள்ளமாட்டார்கள்’” என்றார். “இந்த உவமை இவ்வாறு பொருள்படுகிறது: விதை தேவனுடைய வசனமாகும். பாதையோரத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக் கேட்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால் பிசாசு வந்து அவர்கள் இதயத்தில் இருந்து அந்த போதனையை எடுத்துப் போகிறான். எனவே அந்த மனிதர்கள் போதனையை நம்பி, இரட்சிப்படைய முடியாது. பாறையில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? தேவனுடைய போதனையைக் கேட்டு, மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிற மனிதர்களுக்கு ஒப்பானது. ஆனால், இந்த மனிதர்கள் ஆழமாக வேர் விடுவதில்லை. கொஞ்ச நேரம் நம்பிக்கை வைப்பர். ஆனால் பின்பு தொல்லைகள் வரும். நம்புவதை விடுத்து, தேவனை விட்டு விலகிச் செல்வர். “முட்புதர்களின் நடுவில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனுடைய போதனையைக்கேட்டும், கவலை, செல்வம், இவ்வாழ்வின் களிப்பு ஆகியவற்றால் அப்போதனைகளை வளரவிடாது தடுக்கப்பட்டவர்களைக் குறிக்கிறது. எனவே, அவர்கள் ஒருபோதும் நல்ல பலன் கொடுப்பதில்லை. நல்ல நிலத்தில் விழுந்த விதை எதைக் குறிக்கிறது? அது தேவனின் போதனைகளை உண்மையான நல்ல இதயத்தோடு கேட்கின்ற மக்களைப் போன்றது. அவர்கள் தேவனுடைய போதனைகளுக்குக் கீழ்ப்படிந்து பொறுமையாக நற்பலனைக் கொடுப்பவர்களாவார்கள். “எந்த மனிதனும் விளக்கைக் கொளுத்தி, ஒரு பாத்திரத்தினால் மூடி, படுக்கையின் கீழே மறைத்து வைப்பது இல்லை. ஆனால் அம்மனிதன் விளக்கை அதற்குரிய விளக்குத் தண்டின்மேல் உள்ளே நுழையும் மக்கள் அனைவருக்கும் ஒளி தரும்படியாக ஏற்றி வைப்பான். மறைக்கப்பட்டவை அனைத்தும் வெளிப்படும். ஒவ்வொரு இரகசியமும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். எவ்வாறு கவனிக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். புரியும் திறன் பெற்ற மனிதன் மிகுதியாக அறிந்துகொள்வான். புரியும் திறனற்ற மனிதனோ தனக்கு இருப்பதாக அவன் நினைக்கும், புரியும் திறனையும் இழந்துவிடுவான்” என்றார். இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைக் காண வந்தனர். இயேசுவின் தாயும் சகோதரரும் இயேசுவை நெருங்க முடியாதபடி பல மக்கள் அவரைச் சூழ்ந்திருந்தனர். ஒருவன் இயேசுவிடம், “உங்கள் தாயும், சகோதரர்களும் வெளியே நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் உங்களைக் காண விரும்புகின்றனர்” என்றான். இயேசு அவர்களுக்கு, “தேவனுடைய போதனையைக் கேட்டு, அதன்படி கீழ்ப்படிந்து நடக்கிற மக்களே என் தாயும், சகோதரர்களும் ஆவார்கள்” என்று பதிலளித்தார்.