லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:31-50

லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:31-50 TAERV

“இக்காலத்து மக்களைப்பற்றி நான் என்ன கூறட்டும்? அவர்களை எதனோடு ஒப்பிடட்டும்? அவர்கள் எதைப் போன்றவர்கள்? இக்காலத்து மக்கள் சந்தையில் அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் போன்றவர்கள். ஒரு கூட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் பிற சிறுவர்களை அழைத்து, “‘நாங்கள் உங்களுக்காக இசை இசைத்தும் நீங்கள் ஆடவில்லை. நாங்கள் சோகப்பாடல் பாடியும் நீங்கள் துக்கம் அடையவில்லை’ என்று கூறுவதுபோல் உள்ளனர். யோவான் ஸ்நானகன் பிறரைப் போன்று உண்ணவோ, திராட்சை இரசம் பருகவோ செய்யவில்லை. நீங்கள், ‘அவனுக்குள்ளே பிசாசின் அசுத்த ஆவி இருக்கிறது’ என்கிறீர்கள். மனித குமாரன் பிறரைப் போன்று உண்பவராகவும், திராட்சை இரசம் பருகுபவராகவும் வந்தார். நீங்கள், ‘அவரைப் பாருங்கள். அவர் தேவைக்கும் மிகுதியாக உண்டு, மிகுதியாக திராட்சை இரசம் பருகுகிறார். அவர் வரிவசூலிப்பவர்களுக்கும் தீயோருக்கும் நண்பராக இருக்கிறார்’ என்கிறீர்கள். ஆனால் ஞானமானது அதன் செய்கைகளால் சரியானதென விளங்கும்” என்றார். பரிசேயர்களில் ஒருவன் தன்னோடு உண்ணுமாறு இயேசுவை அழைத்தான். இயேசு பரிசேயனின் வீட்டுக்குள் சென்று மேசையில் அமர்ந்தார். அப்போது நகரத்தில் பாவியான பெண் ஒருத்தி இருந்தாள். பரிசேயனின் வீட்டில் இயேசு உணவு உண்பதை அவள் அறிந்திருந்தாள். எனவே அலங்கரிக்கப்பட்ட ஜாடி ஒன்றில் நறுமணத் தைலத்தை அவள் கொண்டு வந்தாள். அவள் இயேசுவின் பாதத்தருகே, அழுதுகொண்டே நின்றாள். அவளது கண்ணீரால் இயேசுவின் பாதங்களைக் கழுவ ஆரம்பித்தாள். அவளது தலைமயிரால் இயேசுவின் பாதங்களைத் துடைத்து உலரவைத்தாள். அவரது பாதங்களைப் பலமுறை முத்தமிட்டு நறுமண தைலத்தைப் பாதங்களில் பூசினாள். தனது வீட்டுக்கு இயேசுவை அழைத்த பரிசேயன் இதைக் கண்டான். அவன் தனக்குள், “உண்மையாகவே இயேசு ஒரு தீர்க்கதரிசியாக இருந்தால் தன்னைத் தொடுகிற பெண் ஒரு பாவி என்பதை அறிந்திருப்பார்” என்று நினைத்தான். இயேசு பரிசேயனை நோக்கி, “சீமோனே! நான் உனக்குச் சிலவற்றைக் கூறவேண்டும்” என்றார். சீமோன், “போதகரே, சொல்லுங்கள், கேட்டுக் கொண்டிருக்கிறேன்” என்றான். “இரண்டு மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒரே மனிதனிடம் கடன் வாங்கினர். ஒருவன் ஐந்நூறு வெள்ளிப் பணம் கடன் வாங்கியிருந்தான். மற்றொருவன் ஐம்பது வெள்ளிப்பணம் கடனாக வாங்கியிருந்தான். பணம் இல்லாததால் இருவராலும் கடனை அடைக்க முடியாமல் போயிற்று. கடன் கொடுத்த மனிதன் இருவரிடமும் அவர்களுடைய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாகக் கூறினான். இப்போது கடன் பெற்றிருந்த இருவரில் யார் அதிக அளவில் கடன் கொடுத்த மனிதனை நேசிப்பார்கள்?” என்று கேட்டார் இயேசு. சீமோன், “அந்த மனிதனிடம் அதிக அளவு பணம் பெற்றிருந்த மனிதனே அதிக நேசம் கொண்டவனாக இருப்பான் என எண்ணுகிறேன்” என்று பதில் கூறினான். இயேசு சீமோனை நோக்கி, “நீ கூறியது சரியே” என்றார். பின்பு அப்பெண்ணைச் சுட்டிக்காட்டி சீமோனிடம், “இந்த பெண்ணைப் பார்த்தாயா? நான் உன்னுடைய வீட்டுக்கு வந்தபோது என் பாதங்களைக் கழுவுவதற்கு நீ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவளோ தன் கண்ணீரால் என் பாதங்களைக் கழுவித் தன் தலை மயிரால் என் பாதங்களைத் துடைத்து உலர்த்தினாள். நீ என்னை முத்தமிடவில்லை. நான் உள்ளே வந்ததிலிருந்து அவள் என் பாதங்களை முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள். நீ என் தலையில் எண்ணெயால் தடவவில்லை. ஆனால் அவள் என் பாதங்களை நறுமண தைலத்தால் தடவினாள். அவளுடைய கணக்கற்ற பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டன என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். அவள் காட்டிய மிகுந்த அன்பே இதைத் தெளிவாக்குகிறது. மன்னிக்கப்பட வேண்டியதன் தேவையைச் சற்றே உணர்ந்தவன் மன்னிப்படையும்போது சிறிதளவு அன்பையே உணர்வான்” என்றார். பின் இயேசு அவளை நோக்கி, “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். மேசையைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த மனிதர்கள் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் தன்னை யாரென்று நினைத்துக் கொள்கிறான்? அவன் எப்படிப் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று நினைத்துக் கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, “நீ விசுவாசித்ததால் பாவங்களினின்று விடுதலையடைந்தாய். நிம்மதியோடு போ” என்றார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த லூக்கா எழுதிய சுவிசேஷம் 7:31-50