லூக்கா எழுதிய சுவிசேஷம் 24:36-53

லூக்கா எழுதிய சுவிசேஷம் 24:36-53 TAERV

அவர்கள் இருவரும் இவற்றைக் கூறிக்கொண்டிருந்தபோது சீஷர்களின் கூட்டத்தின் நடுவில் இயேசு நின்றிருந்தார். இயேசு அவர்களை நோக்கி, “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக” என்றார். சீஷர்களுக்கு இது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர்கள் பயந்தார்கள். அவர்கள் ஏதோ ஒரு ஆவியைப் பார்த்துக்கொண்டிருப்பதாக எண்ணினார்கள். ஆனால் இயேசு, “நீங்கள் எதற்காகக் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? நீங்கள் காண்பதில் ஏன் ஐயம்கொள்கின்றீர்கள்? என் கைகளையும் என் பாதங்களையும் பாருங்கள். உண்மையாகவே நான்தான். என்னைத் தொடுங்கள். எனக்கு உயிருள்ள உடல் இருப்பதைப் பார்க்க முடியும். ஓர் ஆவி இப்படிப்பட்ட உடல் கொண்டிருக்காது” என்றார். இயேசு அவர்களுக்கு இதைக் கூறிய பின்பு, அவர்களுக்குத் தன் கைகளிலும், பாதங்களிலும் உள்ள ஆணித் துளைகளைக் காட்டினார். சீஷர்கள் ஆச்சரியமுற்றவர்களாக இயேசுவை உயிரோடு பார்த்ததால் மிகவும் மகிழ்ந்தார்கள். எனினும் கூட தாம் பார்த்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. அவர்களை நோக்கி இயேசு, “உங்களிடம் இங்கே ஏதாவது உணவு இருக்கிறதா?” என்று கேட்டார். அவர்கள் சமைத்த மீனில் ஒரு துண்டைக் கொடுத்தார்கள். சீஷர்களின் முன்னிலையில் இயேசு அந்த மீனை எடுத்து சாப்பிட்டார். அவர்களை நோக்கி இயேசு, “நான் உங்களோடு இருந்த காலத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். மோசேயின் சட்டத்திலும், தீர்க்கதரிசிகளின் நூற்களிலும், சங்கீதத்திலும் என்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற அனைத்தும் நடந்தேயாக வேண்டும் என்று நான் சொன்னேன்” என்றார். பின்பு இயேசு சீஷர்களுக்கு வேதாகமத்தை விளக்கினார். தன்னைப்பற்றி எழுதப்பட்டிருக்கிற காரியங்களை அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவினார். பிறகு அவர்களை நோக்கி, “கிறிஸ்து கொல்லப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து எழுவார் என்று எழுதப்பட்டிருக்கிறது. நீங்கள் நடந்தவை அனைத்தையும் பார்த்தீர்கள். நீங்களே சாட்சிகள். மக்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியும் என்று நீங்கள் போய் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். அவர்கள் தம் மனம் மாறி, தாம் செய்த பாவங்களுக்காக வருந்த வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். அதைச் செய்தால் அவர்கள் தேவனால் மன்னிக்கப்படுவர். எருசலேமிலிருந்து நீங்கள் புறப்பட்டு என் பெயரில் இவற்றைப் போதிக்க வேண்டும். உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் இந்த நற்செய்தி கூறப்பட வேண்டும். கவனியுங்கள், என் பிதா உங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை உங்களுக்கு அனுப்புவேன். விண்ணில் இருந்து அந்த வல்லமையை நீங்கள் பெறும்வரைக்கும் எருசலேமில் தங்கி இருக்கவேண்டும்” என்றார். எருசலேமில் இருந்து பெத்தானியா வரைக்கும் இயேசு சீஷர்களை அழைத்துச் சென்றார். பின்பு கைகளை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார். இயேசு அவர்களை வாழ்த்தும்போது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு பரலோகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டார். சீஷர்கள் அவரை அங்கே வணங்கினர். பிறகு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் மிகவும் மகிழ்வோடு இருந்தார்கள். தேவனை வாழ்த்தியவாறே எப்போதும் அவர்கள் தேவாலயத்தில் தங்கி இருந்தார்கள்.

லூக்கா எழுதிய சுவிசேஷம் 24:36-53 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்