லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:39-56

லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:39-56 TAERV

சிலுவையில் அறையப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் இயேசுவுக்கு எதிராகத் தீய சொற்களைச் சொல்லிக்கொண்டிருந்தான். “நீ கிறிஸ்து அல்லவா? உன்னைக் காப்பாற்றிக்கொள். எங்களையும் காப்பாற்று” என்றான். ஆனால் இன்னொரு குற்றவாளி அவனைத் தடுத்தான். அவன், “நீ தேவனுக்கு பயப்பட வேண்டும். நாம் எல்லாரும் விரைவில் இறந்து போவோம். நீயும், நானும் குற்றவாளிகள். நாம் செய்த குற்றங்களுக்கான விலையைக் கொடுக்க வேண்டியிருப்பதால் நீயும் நானும் கொல்லப்பட வேண்டியவர்கள். ஆனால் இம்மனிதரோ (இயேசு) எந்தத் தவறும் செய்ததில்லை” என்றான். பின்பு இக்குற்றவாளி இயேசுவை நோக்கி, “இயேசுவே, உங்கள் இராஜ்யத்தை ஆரம்பிக்கும்போது என்னை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள்” என்றான். இயேசு அவனை நோக்கி, “கவனி, நான் சொல்வது உண்மை. இன்று நீ என்னோடு சேர்ந்து பரலோகத்திலிருப்பாய்” என்றார். அப்போது மதிய வேளை. ஆனால் மதிய நேரம் பின்பு மூன்று மணிவரையிலும் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார். அங்கு நின்ற இராணுவ அதிகாரி நடந்தவற்றை எல்லாம் பார்த்தான். அவன், “இந்த மனிதன் உண்மையிலேயே தேவ குமாரன்தான் என்பதை அறிவேன்” என்று கூறியவாறே தேவனை வாழ்த்தினான். இதைப் பார்க்கவென்று நகரிலிருந்து பலரும் வந்திருந்தார்கள். பார்த்ததும் துயரமிகுதியால் மார்பில் அறைந்தபடி வீட்டுக்குத் திரும்பினார்கள். இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் அங்கு இருந்தார்கள். கலிலேயாவில் இருந்து இயேசுவைத் தொடர்ந்து வந்த சில பெண்களும் அங்கே இருந்தார்கள். அவர்கள் சிலுவைக்கு சற்றே தொலைவில் இவற்றைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தார்கள். அரிமத்தியா என்னும் நகரில் இருந்து ஒரு மனிதன் அங்கே வந்திருந்தான். அவன் பெயர் யோசேப்பு. அவன் நல்ல பக்தியுள்ள மனிதன். தேவனின் இராஜ்யத்தின் வருகையை எதிர் நோக்கி இருந்தான். யூதர் அவையில் அவன் ஒரு உறுப்பினன். பிற யூத அதிகாரிகள் இயேசுவைக் கொல்ல முடிவெடுத்தபோது அவன் அதை ஒப்புக்கொள்ளவில்லை. இயேசுவின் உடலைக் கேட்கும்பொருட்டு யோசேப்பு பிலாத்துவிடம் சென்றான். உடலை எடுத்துக்கொள்ள பிலாத்து, யோசேப்புக்கு அனுமதி கொடுத்தான். எனவே யோசேப்பு சிலுவையில் இருந்து இயேசுவின் உடலைக் கீழே இறக்கி ஒரு துணியால் உடலைச் சுற்றினான். பிறகு பாறைக்குள் தோண்டப்பட்டிருந்த ஒரு கல்லறைக்குள் இயேசுவின் உடலை வைத்தான். அக்கல்லறை அதற்கு முன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அப்பொழுது ஆயத்த நாளின் இறுதிப்பகுதி நெருங்கியது. சூரியன் மறைந்த பிறகு ஓய்வு நாள் ஆரம்பிக்கும். கலிலேயாவில் இருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்கள் யோசேப்பைத் தொடர்ந்தனர். அவர்கள் கல்லறையைப் பார்த்தார்கள். இயேசுவின் உடல் உள்ளே கிடத்தப்பட்டிருந்த இடத்தையும் பார்த்தார்கள். இயேசுவின் உடலில் பூசுவதற்காக மணம்மிக்க பொருள்களைத் தயாரிப்பதற்காக அப்பெண்கள் சென்றார்கள். ஓய்வு நாளில் அவர்கள் ஓய்வெடுத்தார்கள். மோசேயின் சட்டம் இவ்வாறு செய்யுமாறு எல்லா மக்களுக்கும் கட்டளை இட்டிருந்தது.