புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. பஸ்கா ஆட்டுக்குட்டிகளை யூதர்கள் பலியிடுகிற நாள் அது ஆகும். பேதுருவையும் யோவனையும் நோக்கி இயேசு, “நாம் உண்பதற்கு நீங்கள் சென்று பஸ்கா விருந்தைத் தயாரியுங்கள்” என்றார். பேதுருவும், யோவானும், இயேசுவிடம், “பஸ்கா விருந்தை நாங்கள் எங்கே தயாரிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இயேசு அவர்களை நோக்கி, “கவனியுங்கள், நீங்கள் எருசலேமுக்குள் சென்ற பின்பு ஒரு குடத்தில் தண்ணீரைச் சுமந்து செல்லும் ஒரு மனிதனைக் காண்பீர்கள். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குள் செல்வான். அவனோடு நீங்கள் செல்லுங்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘போதகரும் அவரது சீஷர்களும் பஸ்கா விருந்து உண்ணக் கூடிய அறையைத் தயவுசெய்து எங்களுக்குக் காட்டும்படியாக போதகர் கேட்கிறார்’ என்று சொல்லுங்கள். உடனே அந்த வீட்டின் சொந்தக்காரனான அம்மனிதன் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவான். இந்த அறை உங்களுக்குத் தயாராக இருக்கும். பஸ்கா விருந்தை அங்கே தயாரியுங்கள்” என்றார். எனவே பேதுருவும், யோவானும் சென்றார்கள். இயேசு கூறியபடியே எல்லாம் நிகழ்ந்தன. எனவே அவர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தார்கள். பஸ்கா விருந்தை அவர்கள் சாப்பிடும் நேரம் வந்தது. இயேசுவும், சீஷர்களும் மேசையைச் சூழ்ந்து அமர்ந்தனர். அவர்களிடம் இயேசு, “நான் இறக்கும் முன்பு இந்தப் பஸ்கா விருந்தை உங்களோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். தேவனின் இராஜ்யத்தில் அதற்குரிய உண்மையான பொருள் கொடுக்கப்படும்வரைக்கும் நான் இன்னொரு பஸ்கா விருந்தைப் புசிக்கமாட்டேன்” என்றார். பின்பு இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்பு அவர், “இக்கோப்பையை எடுத்து இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள். ஏனெனில் தேவனின் இராஜ்யம் வரும்வரைக்கும் நான் மீண்டும் திராட்சை இரசம் குடிக்கப் போவதில்லை” என்றார். பின்பு இயேசு, அப்பத்தை எடுத்தார். அப்பத்திற்காக தேவனுக்கு நன்றி கூறிவிட்டு அதைப் பிட்டார். சீஷர்களுக்கு அதைக் கொடுத்தார். பின்பு இயேசு, “இதனை நான் உங்களுக்காகக் கொடுக்கிறேன். எனது சரீரமே இந்த அப்பமாகும். எனவே என்னை நினைவுகூருவதற்கு இப்படிச் செய்யுங்கள்” என்றார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் லூக்கா எழுதிய சுவிசேஷம் 22
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா எழுதிய சுவிசேஷம் 22:7-19
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்