லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:43-52

லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:43-52 TAERV

பண்டிகை நாட்கள் முடிந்த பின்னர் அவர்கள் வீடு திரும்பினர். அவர்களுக்குத் தெரியாமலேயே இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். யோசேப்பும், மரியாளும் ஒரு நாள் முழுதும் பயணம் செய்தனர். இயேசு கூட்டத்தினரோடுகூட இருப்பதாக அவர்கள் எண்ணினர். சுற்றத்தார்களிடையேயும், நெருங்கிய நண்பர்களிடமும் இயேசுவைத் தேட ஆரம்பித்தனர். ஆனால் யோசேப்பும் மரியாளும் கூட்டத்தில் இயேசுவைக் காணாததால் அவரைத் தேடும்பொருட்டு எருசலேமுக்குத் திரும்பினர். மூன்று நாட்களுக்குப் பின்னர் அவரைக் கண்டனர். மத போதகர்கள் கூறுவதைக் கேட்பதும் அவர்களிடம் வினா எழுப்புவதுமாக இயேசு தேவாலயத்திற்குள் அமர்ந்திருந்தார். எல்லாரும் அவர் பேசுவதைக் கேட்டனர். அவரது புரிந்துகொள்ளும் திறனையும் ஞானம் நிரம்பிய பதில்களையும் உணர்ந்து அவர்கள் வியந்தனர். இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கண்டதும் வியப்புற்றனர். அவரது தாய் அவரை நோக்கி, “மகனே, நீ ஏன் இதை எங்களுக்குச் செய்தாய்? உனது தந்தையும் நானும் உன்னை நினைத்துக் கவலைப்பட்டோமே. நாங்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருந்தோம்” என்றாள். இயேசு அவர்களை நோக்கி, “ஏன் என்னைத் தேடினீர்கள்? எனது பிதாவின் வேலை இருக்கிற இடத்தில் நான் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்!” என்றார். அவர் கூறியதன் ஆழமான உள் பொருளை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களோடு நாசரேத்துக்குச் சென்றார். அவரது பெற்றோர் கூறியவற்றிற்குக் கீழ்ப்படிந்தார். அவரது தாய் நடந்த எல்லாவற்றைக் குறித்தும் சிந்தித்துக்கொண்டிருந்தாள். இயேசு மேலும், மேலும் தொடர்ந்து கற்றறிந்தார். அவர் சரீரத்திலும் வளர்ச்சியுற்றார். மக்கள் இயேசுவை விரும்பினர். இயேசு தேவனைப் பிரியப்படுத்தி வாழும் வாழ்க்கைக்கு மாதிரியாயிருந்தார்.

லூக்கா எழுதிய சுவிசேஷம் 2:43-52 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்