பரிசேயர்களில் சிலர் இயேசுவை நோக்கி, “தேவனின் இராஜ்யம் எப்போது வரும்?” என்று கேட்டார்கள். இயேசு பதிலாக, “தேவனுடைய இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் கண்களால் பார்க்கும்படியான வகையில் அல்ல. ‘பாருங்கள், தேவனுடைய இராஜ்யம் இங்கே இருக்கிறது’ அல்லது ‘அங்கே இருக்கிறது’ என்று மக்கள் சொல்லமாட்டார்கள். இல்லை, தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது” என்றார். பின்பு இயேசு அவரது சீஷர்களை நோக்கி, “மனித குமாரனின் நாட்களில் ஒன்றை நீங்கள் காண விரும்பும் காலம் வரும். ஆனால் உங்களால் அதைப் பார்க்க இயலாது. மக்கள் உங்களிடம், ‘பாருங்கள், அது அங்கே இருக்கிறது’ அல்லது ‘பாருங்கள், இங்கே அது இருக்கிறது’ என்பார்கள். நீங்கள் இருக்கும் இடத்தில் நிலைத்திருங்கள். எங்கேயும் தேடாதீர்கள்” என்றார். “மனித குமாரன் திரும்ப வருவார், என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் வரும் நாளில் வானில் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு ஒளிவிடும் மின்னலைப்போல அவர் ஒளிவீசுவார். ஆனால் முதலில் மனித குமாரன் பல துன்பங்களைத் தாங்கி இந்தக் காலத்து மக்களால் தள்ளப்பட வேண்டியதாயிருக்கிறது. “நோவா வாழ்ந்த காலத்தைப்போலவே மீண்டும் மனித குமாரன் வரும் பொழுதும் நடக்கும். நோவாவின் காலத்தில் நோவா படகில் நுழைந்த தினத்தில் கூட மக்கள் உண்டு, பருகி, மணம் செய்து வாழ்ந்தார்கள். அப்பொழுது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எல்லா மக்களையும் கொன்றது. “தேவன், லோத்தின் காலத்தில் சோதோமை அழித்ததைப் போலவே அதுவும் இருக்கும். அந்த மக்கள் உண்டு பருகி, வாங்கி, விற்று, நட்டு, தங்களுக்காக வீடுகளைக் கட்டிக்கொண்டு இருந்தார்கள். லோத்து தனது ஊரை விட்டுப்போன நாளில் கூட மக்கள் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருந்தார்கள். வானத்தில் இருந்து அக்கினி வந்து அவர்கள் எல்லாரையும் கொன்றது. மனித குமாரன் மீண்டும் வரும்போதும் இதே விதமாக நடக்கும். “அந்த நாளில் ஒரு மனிதன் கூரையின் மீது இருந்தால், அவன் உள்ளேபோய் தனது பொருட்களை எடுத்துக்கொள்வதற்கு அவனுக்கு நேரம் இருக்காது. ஒரு மனிதன் வயலில் இருந்தால், அவன் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. லோத்தின் மனைவிக்கு என்ன நேரிட்டது என்பதை நினைவுகூருங்கள்! “தன் உயிரைக் காப்பற்றிக்கொள்ள முயலும் ஒருவன் அதை இழந்து போவான். ஆனால் உயிரைக் கொடுக்கிறவனோ அதை மீட்டுக்கொள்வான். இரவில் ஒரே அறையில் இரண்டுபேர் உறங்கிக்கொண்டிருக்கக் கூடும். ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான். மற்றவன் விட்டுவிடப்படுவான். இரு பெண்கள் ஒருமித்து தானியங்களை அரைத்துக்கொண்டிருக்கக் கூடும். ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள். மற்றொருத்தி விட்டு விடப்படுவாள்” என்றார். சீஷர்கள் இயேசுவிடம், “ஆண்டவரே, இது எங்கே நடக்கும்?” என்று கேட்டார்கள். பதிலாக இயேசு, “வட்டமிடுகிற கழுகுகளைப் பார்ப்பதின் மூலம் இறந்த சடலத்தை மக்கள் எப்போதும் கண்டுபிடிக்க முடியும்” என்றார்.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் லூக்கா எழுதிய சுவிசேஷம் 17
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:20-37
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்