லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:1-10

லூக்கா எழுதிய சுவிசேஷம் 17:1-10 TAERV

இயேசு தன் சீஷர்களை நோக்கி, “மக்கள் பாவம் செய்யும்படியான காரியங்கள் நிச்சயமாக நடக்கும். ஆனால் இது நடக்கும்படியாகச் செய்கிறவனுக்குத் தீமை விளையும் பலவீனமான மனிதர்கள் பாவம் செய்யும்படியாகச் செய்கிற ஒருவனுக்குத் தீமை விளையும். அவன் கழுத்தில் அரைக்கிற கல்லைக் கட்டி அவனைக் கடலில் அமிழ்த்துவது அவனுக்கு நல்லதாக இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்!” “உங்கள் சகோதரன் பாவம் செய்தால் அவனைக் கண்டியுங்கள். ஆனால் அவன் வருந்திப் பாவம் செய்வதை விட்டுவிட்டால், அவனை மன்னியுங்கள். ஒரே நாளில் உங்கள் சகோதரன் ஏழுமுறை உங்களிடம் தவறு செய்தும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் மன்னிப்பு வேண்டினான் என்றால், நீங்கள் அவனை மன்னிக்க வேண்டும்” என்றார். சீஷர்கள் இயேசுவை நோக்கி, “இன்னும் மிகுந்த விசுவாசத்தை எங்களுக்கு வழங்குங்கள்” என்றார்கள். கர்த்தர், “உங்கள் விசுவாசம் ஒரு கடுகளவு பெரியதாக இருந்தால் இந்த முசுக்கட்டை மரத்தைப் பார்த்து, ‘நீ தானாகவே பெயர்ந்து கடலில் விழு’ என்று கூறினால் அந்த மரமானது உங்களுக்குக் கீழ்ப்படியும். “வயலில் வேலை செய்கிற ஊழியன் ஒருவன் உங்களில் ஒருவனுக்கு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவன் நிலத்தை உழுது கொண்டோ, ஆடுகளை மேய்த்துக்கொண்டோ இருக்கிறான். அவன் வயலிலிருந்து வீட்டுக்கு வந்ததும் அவனிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? வந்து சாப்பிட உட்கார் என்பீர்களா? இல்லை. நீங்கள் அந்த ஊழியனிடம், ‘நான் உண்பதற்கு ஏதேனும் தயார் செய். நான் சாப்பிட்டு முடிக்கும்வரை பரிமாறுவதற்கான ஆடைகளை அணிந்துகொள். பிறகு நீ சாப்பிடவும், பருகவும் செய்யலாம்’ என்பீர்கள். தன் வேலையைச் செய்வதற்காக அவனுக்கு விசேஷமாக நன்றி செலுத்த வேண்டியது இல்லை. அவனது எஜமானன் சொல்வதை மட்டும் அவன் செய்துகொண்டிருக்கிறான். அதுவே உங்களுக்கும் பொருந்தும். நீங்கள் செய்யும்படியாக கூறப்பட்ட காரியங்களை நீங்கள் செய்யும்போது நீங்கள், ‘எந்த விசேஷ நன்றியறிதலுக்கும் நாங்கள் தகுதியுடையவர்கள் அல்ல. நாங்கள் செய்யவேண்டிய வேலையையே செய்து முடித்தோம்’ என்று சொல்ல வேண்டும்” என்றார்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்