லூக்கா எழுதிய சுவிசேஷம் 16:1-18

லூக்கா எழுதிய சுவிசேஷம் 16:1-18 TAERV

இயேசு அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன. எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது’ என்றான். “பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன். நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான். “எனவே, அந்த அதிகாரி எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான். “பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான். “பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச் செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள். “நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள். யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது. “ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார். பரிசேயர்கள் இச்செய்திகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பணத்தை நேசித்ததால் இயேசுவை விமர்சித்தார்கள். இயேசு பரிசேயர்களை நோக்கி, “மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன் அறிவார். மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்கள் தேவனின் வெறுப்புக்கு உரியவை ஆகின்றன. “மோசேயின் சட்டத்திற்கிணங்கவும், தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களுக்கேற்பவும் மக்கள் வாழ்வதை தேவன் விரும்பினார். ஆனால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகன் காலம் தொடங்கி, தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள். வேதவாக்கியங்களில் காணப்படுகிற ஒரு எழுத்தின் ஒரு சிறிய பகுதியைக் கூட மாற்ற முடியாது. அதைக் காட்டிலும் வானமும் பூமியும் அழிந்துபோவதே எளிதாக இருக்கும்.” “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்து, இன்னொரு பெண்ணை மணந்துகொண்டால் அவன் விபசாரம் என்னும் பாவத்தைச் செய்தவன் ஆவான். விவாகரத்துக்கு உட்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொள்பவனும் தீய விபசாரம் என்னும் குற்றத்திற்கு உட்பட்டவன் ஆவான்” என்றார்.