லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:1-20

லூக்கா எழுதிய சுவிசேஷம் 1:1-20 TAERV

அன்பான தெயோப்பிலுவே, நம்மிடையே நடந்த பல நிகழ்ச்சிகளின் வரலாற்றைத் தொகுத்தளிக்க பலர் முயற்சி செய்தனர். வேறு சில மக்களிடமிருந்து நாம் கேட்டறிந்த செய்திகளையே அவர்கள் எழுதியிருந்தார்கள். இம்மக்கள் தொடக்கத்திலிருந்து எல்லாவற்றையும் கண்டவர்களும், தேவனுடைய நற்செய்தியை மற்றவர்களுக்குப் போதிப்பதின் மூலம் தேவனுக்கு சேவை செய்துகொண்டிருந்தவர்களும் ஆவார்கள். மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, துவக்கத்திலிருந்தே எல்லாவற்றையும் நானும் கவனமாகக் கற்று அறிந்தேன். அவற்றை உங்களுக்காக எழுதவேண்டும் என்று எண்ணினேன். எனவே அவற்றை ஒரு நூலில் முறைப்படுத்தி எழுதினேன். உங்களுக்குப் போதிக்கப்பட்டிருக்கிற அனைத்தும் உண்மையே என்பதை நீங்கள் அறியும்பொருட்டு இவற்றை எழுதுகிறேன். ஏரோது யூதேயாவை ஆண்ட காலத்தில் சகரியா என்னும் ஆசாரியன் வாழ்ந்து வந்தான். சகரியா அபியாவின் பிரிவினரைச் சார்ந்தவன். ஆரோனின் குடும்பத்தாரைச் சார்ந்தவள் சகரியாவின் மனைவி. அவள் பெயர் எலிசபெத். தேவனுக்கு முன்பாக சகரியாவும், எலிசபெத்தும் உண்மையாகவே நல்லவர்களாக வாழ்ந்தார்கள். தேவன் கட்டளையிட்டவற்றையும், மக்கள் செய்யும்படியாகக் கூறியவற்றையும் அவர்கள் செய்து வந்தனர். அவர்கள் குற்றமற்றவர்களாகக் காணப்பட்டனர். ஆனால், சகரியாவுக்கும், எலிசபெத்துக்கும் குழந்தைகள் இல்லை. எலிசபெத் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் நிலையில் இல்லை. அதோடு இருவரும் முதியோராக இருந்தனர். தன் மக்களுக்காக தேவனுக்கு முன்னர் ஒரு ஆசாரியனாக சகரியா பணியாற்றி வந்தான். தேவனின் பணியை அவனது பிரிவினர் செய்ய வேண்டிய காலம் அது. நறுமணப் புகையைக் காட்டுவதற்காக ஆசாரியர் தங்களுக்குள் ஒருவரை எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள். சகரியா அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். எனவே சகரியா தேவாலயத்திற்குள் நறுமணப்புகை காட்டுவதற்காகச் சென்றான். ஏராளமான மக்கள் வெளியே இருந்தனர். நறுமணப்புகை காட்டும்போது அவர்கள் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர். அப்போது புகை காட்டும் மேசையின் வலது புறத்தில் தேவதூதன் சகரியாவுக்கு முன்பாக வந்து நின்றான். தூதனைப் பார்த்தபோது சகரியா குழப்பமும் பயமும் அடைந்தான். ஆனால் தூதன் அவனைப் பார்த்து, “சகரியாவே, பயப்படாதே. உனது பிரார்த்தனையை தேவன் கேட்டார். உனது மனைவியாகிய எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக. நீ மிகவும் சந்தோஷமாக இருப்பாய். அவனது பிறப்பால் பல மக்கள் மகிழ்ச்சி அடைவர். கர்த்தருக்காகப் பெரிய மனிதனாக யோவான் விளங்குவான். அவன் திராட்சை இரசமோ, மதுபானமோ பருகுவதில்லை. பிறக்கிறபோதே பரிசுத்த ஆவியால் நிரம்பியவனாக யோவான் காணப்படுவான். “நம் தேவனாகிய கர்த்தரிடம் பல யூதர்கள் திரும்புவதற்கு யோவான் உதவுபவன். கர்த்தருக்கு முன்பாக யோவான் முன்னோடியாகச் செல்வான். எலியாவைப் போல் யோவானும் வல்லமை வாய்ந்தவனாக இருப்பான். எலியாவின் ஆவியை உடையவனாக அவன் இருப்பான். தந்தையருக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் இடையே அமைதி நிலவும்படியாகச் செய்வான். பல மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்களை எல்லாம் மீண்டும் சரியானதென்று மக்கள் எண்ணவேண்டிய பாதைக்கு யோவான் அழைத்து வருவான். கர்த்தரின் வருகைக்கு மக்களை யோவான் தயார் செய்வான்” என்றான். சகரியா தூதனை நோக்கி, “நீங்கள் சொல்வது உண்மையென்று நான் எவ்வாறு அறிய முடியும்? நான் வயது முதிர்ந்தவன். என் மனைவியும் வயதானவள்” என்றான். தூதன் அவனுக்குப் பதிலாக, “நான் காபிரியேல். தேவனுக்கு முன்பாக நிற்பவன். உன்னிடம் பேசவும், இந்த நல்ல செய்தியை உன்னிடம் எடுத்துரைக்கவும் தேவன் என்னை அனுப்பினார். இப்போது கேட்பாயாக! இந்தக் காரியங்கள் நடக்கும் நாள்வரைக்கும் நீ பேச முடியாதிருப்பாய். உனது பேசும் சக்தியை நீ இழப்பாய், ஏன்? நான் கூறியதை நீ நம்பாததாலேயே இப்படி ஆகும். ஆனால் இவை அனைத்தும் அதனதன் சரியான சமயத்தில் உண்மையாகவே நடக்கும்” என்றான்.