யோபுடைய சரித்திரம் 40:3-24

யோபுடைய சரித்திரம் 40:3-24 TAERV

அப்போது யோபு, தேவனுக்குப் பதிலுரைத்தான். அவன்: “நான் பேசுவதற்கும் தகுதியற்றவன்! நான் உம்மிடம் என்ன கூறமுடியும்? நான் உமக்கு பதில் கூற முடியாது! நான் என் கைகளை வாயின் மீது வைப்பேன். நான் ஒரு முறை பேசினேன், ஆனால் நான் மீண்டும் பேசமாட்டேன். நான் இருமுறை பேசினேன், ஆனால், இனிமேல் எதுவும் கூறமாட்டேன்” என்றான். அப்போது புயலிலிருந்து கர்த்தர் மீண்டும் யோபுவிடம் பேசினார். கர்த்தர், “யோபுவே, உன் இடையைக் கட்டிக்கொண்டு நான் உன்னிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் கூறு, “யோபுவே, நான் நியாயமற்றவனென்று நீ நினைக்கிறாயா? என்னை தவறிழைக்கும் குற்றவாளியாகக் கூறுவதால், நீ களங்கமற்றவனெனக் காட்ட நினைக்கிறாய்! யோபுவே, உன் கரங்கள் தேவனுடைய கரங்களைப்போன்று வலிமையுடையனவா? இடிபோல முழங்க வல்ல தேவனுடைய குரலைப்போன்ற குரல் உனக்கு உள்ளதா? நீ தேவனைப் போலிருந்தால், பெருமையடைந்து உன்னை நீயே மகிமைப்படுத்திக் கொள்ள முடியும். நீ தேவனைப் போலிருந்தால், ஆடையைப்போன்று மகிமையையும், மேன்மையையும் நீ உடுத்திக்கொள்ள முடியும். நீ தேவனைப் போலிருந்தால், உன் கோபத்தை வெளிப்படுத்தி அகங்காரமுள்ள ஜனங்களைத் தண்டிக்க முடியும். அந்த அகங்காரமுள்ள ஜனங்களைத் தாழ்மையுள்ளோராக்க முடியும். ஆம், யோபுவே, அந்த அகங்காரம் நிரம்பிய ஜனங்களைப் பார், அவர்களைத் தாழ்மையுள்ளோராக்கு. தீயோர் நிற்குமிடத்திலேயே அவர்களை நசுக்கிவிடு. அகங்காரமுள்ள ஜனங்கள் எல்லோரையும் மண்ணுக்குள் புதைத்துவிடு. அவர்கள் உடலை துணியால் சுற்றி அவர்களின் கல்லறைக்குள் வைத்துவிடு. யோபுவே, உன்னால் இக்காரியங்களையெல்லாம் செய்ய முடிந்தால், அப்போது நான்கூட உன்னை வாழ்த்துவேன். உன் சொந்த ஆற்றலால் உன்னை நீ காப்பாற்றிக்கொள்ளக்கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்வேன். “யோபுவே, பிகெமோத்தை நீ கவனித்துப்பார். நான் (தேவன்) பிகெமோத்தை உண்டாக்கினேன், உன்னையும் உண்டாக்கினேன். பிகெமோத் பசுவைப்போல, புல்லைத் தின்கிறது. பிகெமோத்தின் உடம்பு மிகுந்த வல்லமை பொருந்தியது. அதன் வயிற்றின் தசைகள் வல்லமை மிக்கவை. பிகெமோத்தின் வால் கேதுரு மரத்தைப் போல் ஆற்றலோடு காணப்படுகிறது. அதன் கால் தசைகள் மிகுந்த பலமுள்ளவை. பிகெமோத்தின் எலும்புகள் வெண்கலம் போன்று பலமுள்ளவை. அதன் கால்கள் இரும்புக் கம்பிகளைப் போன்றவை. நான் (தேவன்) உண்டாக்கிய மிருகங்களுள் பிகெமோத் மிகவும் வியக்கத்தக்கது. ஆனால் நான் அதை வெல்ல (தோற்கடிக்க) முடியும். காட்டு மிருகங்கள் விளையாடும் மலைகளில் வளரும் புல்லைப் பிகெமோத் தின்கிறது. தாமரைக் கொடிகளின் கீழே பிகெமோத் படுத்திருக்கிறது. அது உளையிலுள்ள (சேற்றிலுள்ள) நாணல்களின் கீழ் மறைந்துக்கொள்ளும். தாமரைக் கொடிகள் அவற்றின் நிழலில் பிகெமோத்தை மறைக்கும். நதியருகே வளரும் அலரி மரங்களின் கீழே அது வாழும். நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், பிகெமோத் ஓடிப்போய்விடாது. யோர்தான் நதியின் தண்ணீர் அதன் முகத்தில் அடித்தாலும் அது அஞ்சாது. பிகெமோத்தின் கண்களை ஒருவனும் குருடாக்கி அதனை வலையில் அகப்படுத்தவும் முடியாது.