யோவான் எழுதிய சுவிசேஷம் 6:45-71

யோவான் எழுதிய சுவிசேஷம் 6:45-71 TAERV

இது தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டிருக்கிறது, ‘தேவன் எல்லா மக்களுக்கும் கற்றுத் தருவார்.’ மக்கள் அப்பிதாவைக் கவனிக்கிறார்கள். கற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்னிடம் வருகிறார்கள். எவரும் பிதாவைப் பார்த்திருப்பதாக நான் கருதவில்லை. தேவனிடம் இருந்து வந்தவர் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறார். “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒருவன் நம்பிக்கை வைத்தால் அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். நானே ஜீவனளிக்கும் அப்பம். உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள். நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார். பிறகு யூதர்கள் தங்களுக்குள் விவாதம் செய்துகொண்டனர். “எவ்வாறு இந்த மனிதன் தனது சரீரத்தை நாம் உண்ணும்படி தருவான்?” என்றனர் அவர்கள். “நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் மனித குமாரனின் சரீரத்தை உண்ணவேண்டும். அவரது இரத்தத்தை அருந்த வேண்டும். இதனை நீங்கள் செய்யாவிட்டால், உங்களுக்கு உண்மையான வாழ்க்கை கிடைக்காது. எனது சரீரத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான். நான் அவனை இறுதி நாளில் எழுப்புவேன். எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். ஒருவன் எனது சரீரத்தைப் புசித்து என் இரத்தத்தை அருந்துவானேயானால் அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும். “பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான். நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் புசித்த அப்பத்தைப்போல் அல்ல நான். அவர்கள் அந்த அப்பத்தை உண்டார்கள். ஆனால், மற்றவர்களைப்போன்று அவர்கள் இறந்துபோயினர். நானோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அப்பம். இதனை உண்ணுகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான்” என்றார் இயேசு. இவை எல்லாவற்றையும் இயேசு, கப்பர்நகூமிலுள்ள யூதர்களின் ஜெப ஆலயத்தில் போதனைசெய்யும்போது கூறினார். இயேசுவின் சீஷர்கள் இவற்றைக் கேட்டார்கள். “இந்த உபதேசங்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவை, இவற்றை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்?” என சீஷர்கள் கூறினர். அவருடைய சீஷர்கள் முறுமுறுப்பதை இயேசு அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நான் சொன்னவற்றை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறதா?” என்று கேட்டார். “அப்படியானால் மனித குமாரன் தாம் வந்த இடத்திற்கே திரும்பி ஏறிப்போவதைக் காண்பது எப்படியிருக்கும்? ஒரு மனிதனுக்கு அவனது சரீரம் மட்டுமே வாழ்வு அளிப்பது இல்லை. அவனது ஆவியே ஜீவனைத் தருகிறது. நான் உங்களுக்குச் சொன்ன வசனங்கள் யாவும் ஆவியே. இவையே ஜீவனைத் தருவன. ஆனால் உங்களில் சிலர் விசுவாசம் இல்லாமல் இருக்கிறீர்கள்” என்றார். (தன்னை விசுவாசிக்காதவர்களை இயேசு புரிந்துகொண்டார். இதனை அவர் துவக்கம் முதலே புரிந்துகொண்டார். தனக்கு எதிராகத் திரும்புகிறவனையும் இயேசு அறிந்திருந்தார்.) அதனால்தான், “நான், ‘பிதா அனுமதித்தால் ஒழிய ஒருவனும் என்னிடம் வரமாட்டான்’ என்று சொன்னேன்” என்றார் இயேசு. இயேசு இவ்வாறு சொன்னபிறகு அவரது சீஷர்களில் அநேகர் அவரை விட்டுப் போயினர். அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்தினர். பிறகு இயேசு தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் பார்த்து, “நீங்களும் விட்டுவிட்டு விலகிச் செல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார். சீமோன் பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை நீரே வைத்திருக்கிறீர். நாங்கள் உம்மை நம்புகிறோம். நீரே தேவனிடமிருந்து வந்த பரிசுத்தமானவர் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார். பிறகு இயேசு அவர்களிடம், “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவர் நீங்கள். ஆனால் உங்களில் ஒருவன் பிசாசு” என்றார். இயேசு யூதாஸைப்பற்றியே இவ்வாறு கூறினார். அவன் சீமோன் ஸ்காரியோத்தின் குமாரன். பன்னிருவரில் ஒருவன். ஆனால் பிற்காலத்தில் யூதாஸ் இயேசுவிற்கு எதிராகத் திரும்பிவிட்டான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் எழுதிய சுவிசேஷம் 6:45-71