யோவான் எழுதிய சுவிசேஷம் 3:1-15

யோவான் எழுதிய சுவிசேஷம் 3:1-15 TAERV

நிக்கொதேமு என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் பரிசேயர்களுள் ஒருவன். அவன் ஓர் முக்கியமான யூதத் தலைவன். ஓர் இரவு அவன் இயேசுவிடம் வந்தான். “போதகரே! நீங்கள் தேவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை நாங்கள் அறிவோம். தேவனின் உதவியின்றி எவரொருவராலும் நீர் செய்வதுபோன்ற அற்புதங்களைச் செய்ய இயலாது” என்று சொன்னான். அதற்கு இயேசு, “நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன். ஒருவன் மீண்டும் பிறக்கவேண்டும். இல்லாவிட்டால் அவன் தேவனுடைய இராஜ்யத்தில் இடம்பெற முடியாது” என்று கூறினார். அதற்கு நிக்கொதேமு, “ஆனால் ஒரு மனிதன் ஏற்கெனவே முதியவனாக இருந்தால் அவன் எப்படி மீண்டும் பிறக்கமுடியும்? ஒருவன் மீண்டும் தாயின் சரீரத்திற்குள் நுழையமுடியாது. ஆகையால் ஒருவன் இரண்டாம் முறையாக பிறக்க முடியாதே” என்றான். இதற்குப் பதிலாக இயேசு, “நான் உனக்கு ஓர் உண்மையைச் சொல்கிறேன். ஒருவன் நீரில் இருந்தும் ஆவியில் இருந்தும் பிறக்க வேண்டும். ஒருவன் இவற்றிலிருந்து பிறக்காவிடில் அவனால் தேவனின் இராஜ்யத்துக்குள் நுழைய முடியாது. ஒரு மனிதனின் சரீரமானது அவனது பெற்றோர்களிடமிருந்து கிடைக்கின்றது. ஆனால் அம்மனிதனது ஆவிக்குரிய வாழ்வோ ஆவியானவரிடமிருந்து பிறக்கிறது. நான் சொன்னதைப் பற்றி நீ வியப்பு அடையவேண்டாம். ‘நீ மறுபடியும் பிறக்க வேண்டும்.’ காற்று எங்கே செல்ல விரும்புகிறதோ அங்கே வீசும். நீ காற்றின் ஓசையைக் கேட்பாய். ஆனால் அந்தக் காற்று எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்பதை நீ அறியமாட்டாய். இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் ஆவியானவரிலிருந்து பிறக்கிறான்” என்றார். “இவை எவ்வாறு இயலும்?” என்று நிக்கொதேமு கேட்டான். “நீ யூதர்களின் முக்கியமான ஒரு போதகன். ஆனால் உன்னால் இவற்றைப்பற்றி இன்னும் புரிந்துகொள்ள முடியவில்லையே! நான் உனக்கு உண்மையைக் கூறுகிறேன், நாங்கள் எங்களுக்குத் தெரிந்தவற்றைப்பற்றியே பேசுகிறோம். நாங்கள் பார்த்தவற்றை மட்டுமே சொல்லுகிறோம். ஆனால் உன்னைப்போன்றவர்கள் நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. நான் பூமியில் உள்ளவற்றைப் பற்றி உனக்குச் சொன்னேன். ஆனால் நீ என்னை நம்புகிறதில்லை. ஆகையால், நான் பரலோகத்தில் உள்ளவற்றைப்பற்றி சொன்னாலும் நீ அவற்றையும் நம்பப்போவதில்லை. பரலோகத்திற்கு ஏறிச் சென்ற ஒரே ஒருவரே பரலோகத்தில் இருந்து இறங்கி வந்தவர். அவர்தான் மனிதகுமாரன். “வனாந்தரத்தில் மோசே பாம்பினை உயர்த்திப் பிடித்தான். அவ்வாறே மனிதகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும். பிறகு அந்த மனிதகுமாரன்மேல் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொருவரும் நித்திய ஜீவனைப் பெறமுடியும்.