இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டுபோனார். அவர் மண்டை ஓடுகளின் இடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப்போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்) கொல்கதாவில் சிலுவையில் இயேசுவை ஆணிகளால் அறைந்தார்கள். அவர்கள் வேறு இருவரையும் சிலுவையில் அறைந்தனர். இயேசுவை நடுவிலும் ஏனைய இருவரை இரு பக்கத்திலும் நட்டு வைத்தனர். பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் ராஜா” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது. யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், “யூதருடைய ராஜா என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய ராஜா என்று சொன்னதாக எழுதவேண்டும்” என்றான். அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான். ஆணிகளால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பிற்பாடு, சேவகர்கள் அவரது ஆடையை எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதனை நான்கு பாகங்களாகப் பங்கு வைத்தனர். ஒவ்வொரு சேவகனும் ஒரு பாகத்தைப் பெற்றான். அவர்கள் அவரது அங்கியையும் எடுத்தனர். அது தையலில்லாமல் ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. எனவே சேவகர்கள் தங்களுக்குள், “இதனை நாம் கிழித்து பங்கு போட வேண்டாம். அதைவிட இது யாருக்கு என்று சீட்டுப் போட்டு எடுத்துக்கொள்வோம்” என சொல்லிக் கொண்டனர். “அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர். என் அங்கியின் மேல் சீட்டுப்போட்டார்கள்” என்று வேதவாக்கியம் கூறியது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது. இயேசுவின் தாயார் சிலுவையின் அருகில் நின்றிருந்தார். அவரது தாயின் சகோதரியும், கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் குமாரன்” என்றார். பிறகு இயேசு தன் சீஷனிடம், “இதோ உன்னுடைய தாய்” என்றார். அதற்குப்பின் அந்த சீஷன் இயேசுவின் தாயைத் தன் வீட்டிற்குத் தன்னோடு அழைத்துச் சென்றான். பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்” என்றார். காடி நிறைந்த பாத்திரம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. அங்கே நின்ற சேவகர்கள் கடற்பஞ்சைக் காடியிலே தோய்த்தார்கள். அதனை ஈசோப்புத் தண்டில் மாட்டினார்கள். பிறகு அதனை இயேசுவின் வாயருகே நீட்டினார்கள். இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார். அது ஆயத்தநாளாக இருந்தது. மறுநாள் சிறப்பான ஓய்வு நாள். ஓய்வு நாளில் சரீரங்கள் உயிரோடு சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களைச் சாகடிக்க கால்களை முறித்துக் கொல்ல வேண்டும் என இதற்கான உத்தரவை யூதர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். அதோடு அவர்களின் பிணங்களைச் சிலுவையில் இருந்து அப்புறப்படுத்தவும் அனுமதி பெற்றனர். எனவே, சேவகர்கள் இயேசுவின் ஒருபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களை முறித்தனர். பிறகு அவர்கள் இயேசுவின் மறுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களையும் முறித்தனர். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை. ஆனால் ஒரு சேவகன் தனது ஈட்டியால் இயேசுவின் விலாவில் குத்தினான். அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளியே வந்தது. (இவ்வாறு நிகழ்வதைப் பார்த்தவன் அதைப்பற்றிக் கூறுகிறான். அவனே அதைக் கூறுவதால் அதனை நீங்களும் நம்ப முடியும். அவன் சொல்கின்றவை எல்லாம் உண்மை. அவன் சொல்வது உண்மையென்று அவன் அறிந்திருக்கிறான்.) “அவரது எலும்புகள் எதுவும் முறிக்கப்படுவதில்லை” என்று வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டவை நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது. அத்துடன் “மக்கள் தாங்கள் ஈட்டியால் குத்தினவரைப் பார்ப்பார்கள்” என்றும் வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
வாசிக்கவும் {{புத்தகம் & அதிகாரம்}}
கேளுங்கள் யோவான் எழுதிய சுவிசேஷம் 19
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: யோவான் எழுதிய சுவிசேஷம் 19:17-37
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்