யோவான் எழுதிய சுவிசேஷம் 18:24-40

யோவான் எழுதிய சுவிசேஷம் 18:24-40 TAERV

ஆகையால் அன்னா இயேசுவைத் தலைமை ஆசாரியனாகிய காய்பாவிடம் அனுப்பிவைத்தான். இயேசு அப்பொழுது கட்டப்பட்ட நிலையிலேயே இருந்தார். சீமோன் பேதுரு நெருப்பருகில் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்தவர்கள் “அந்த மனிதனின் சீஷர்களுள் நீயும் ஒருவன்தானே?” என்று கேட்டார்கள். பேதுரு அதனை மறுத்தான். அவன், “இல்லை. நான் அல்ல” என்றான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரர்களுள் ஒருவன் அங்கு இருந்தான். அவன் பேதுருவால் காது அறுபட்டவனின் உறவினன். அவன், “அந்தத் தோட்டத்தில் நான் உன்னையும் அந்த மனிதனோடு பார்த்தேன் என்று நினைக்கிறேன்” என்றான். ஆனால் பேதுரு மீண்டும், “இல்லை. நான் அவரோடு இருக்கவில்லை” என்று கூறினான். அப்பொழுது சேவல் கூவிற்று. பிறகு யூதர்கள் இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநரின் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்போது அதிகாலை நேரம். யூதர்கள் அரண்மனைக்கு உள்ளே போக விரும்பவில்லை. போனால் அவர்களின் தூய்மை கெட்டுத் தீட்டுப்படும். ஏனென்றால் அவர்கள் பஸ்கா பண்டிகையின் விருந்தை உண்ண விரும்பினர். எனவே பிலாத்து வெளியே வந்தான். அவன் அவர்களிடம், “இந்த மனிதன் மீது என்ன குற்றம் சாட்டுகிறீர்கள்?” என்று கேட்டான். அதற்கு யூதர்கள், “அவன் ஒரு கெட்ட மனிதன். அதனால்தான் அவனை உம்மிடம் அழைத்து வந்தோம்” என்றனர். பிலாத்து யூதர்களிடம், “யூதர்களாகிய நீங்கள் இவனை அழைத்துக்கொண்டு போய் உங்கள் விதி முறைகளின்படி நியாயம் தீருங்கள்” என்றான். அதற்கு யூதர்கள், “எவரையும் மரண தண்டனைக்குட்படுத்த எங்களுக்கு அதிகாரமில்லையே” என்றனர். (தான் எவ்வாறு மரிக்கப்போகிறேன் என்று ஏற்கெனவே இயேசு சொல்லியிருந்தது உண்மையாகும்படி இவ்வாறு நிகழ்ந்தது) பிறகு பிலாத்து அரண்மனைக்குள் திரும்பிச் சென்றான். அவன் இயேசுவைத் தன்னிடம் அழைத்தான். “நீ யூதர்களின் ராஜாவா?” என்று அவரிடம் கேட்டான். இயேசு அவனிடம், “இது உமது சொந்தக் கேள்வியா அல்லது என்னைப்பற்றி பிறர் உம்மிடம் சொன்னதா?” என்று கேட்டார். பிலாத்து அதற்கு, “நான் யூதனல்ல. உனது சொந்த மக்களும் அவர்களின் தலைமை ஆசாரியனும் உன்னை என்னிடம் கொண்டுவந்திருக்கிறார்கள். நீ என்ன தவறு செய்தாய்?” என்று கேட்டான். “எனது இராஜ்யம் இந்த உலகத்துக்கு உரியதன்று. அது இந்த உலகத்தோடு தொடர்புடையது எனில் என் சேவகர்கள் எனக்காகப் போரிட்டிருப்பார்கள். நான் யூதர்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கமாட்டேன். எனவே என் இராஜ்யம் இவ்விடத்திற்கு உரியதன்று” என்று இயேசு சொன்னார். பிலாத்து அவரிடம், “அப்படியானால் நீ ராஜா தானோ?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் ராஜா என்று நீ சொல்கிறாய். அது உண்மைதான். இந்த நோக்கத்துக்காகத் தான் நான் இந்த உலகத்தில் பிறந்தேன். உண்மையைச் சொல்வதற்காக வந்தேன். உண்மையுடையவன் எவனும் என் பேச்சைக் கேட்கிறான்” என்றார். பிலாத்து, “உண்மை என்பது என்ன?” என்று கேட்டான். கேட்டுக்கொண்டே மறுபடியும் அவன் யூதர்களிடம் போனான். “நான் அவனுக்கெதிராகக் குற்றம்சாட்ட முடியவில்லை. பஸ்கா பண்டிகையில் உங்களுக்காக எவனாவது ஒருவனை நான் விடுதலை செய்யலாமே. ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை செய்யலாமா?” என்று கேட்டான். அதற்கு யூதர்கள், “இவனை அல்ல, பரபாஸை விடுதலை செய்யுங்கள்” என்று சத்தமிட்டார்கள். (பரபாஸ் என்பவன் ஒரு திருடன்).