யோவான் எழுதிய சுவிசேஷம் 15:9-17

யோவான் எழுதிய சுவிசேஷம் 15:9-17 TAERV

“பிதா என்னை நேசிப்பதுபோன்று நான் உங்களை நேசிக்கிறேன். இப்பொழுது எனது அன்பில் நிலைத்திருங்கள். நான் என் பிதாவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன். நான் அவரது அன்பில் நிலைத்திருக்கிறேன். இதைப்போலவே, நீங்களும் எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் எனது அன்பில் நிலைத்திருப்பீர்கள். நான் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறேன். எனவே நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெறலாம். உங்கள் மகிழ்ச்சி முழுமையாக இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதைத்தான் நான் உங்களுக்குக் கட்டளை இடுகிறேன்: நான் உங்களை நேசிப்பது போல் நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். ஒருவன் தன் நண்பனுக்காக இறப்பதைவிடச் சிறந்த அன்பு வேறு எதுவுமில்லை. நான் சொன்னபடி செய்தால் நீங்களும் எனது சிறந்த நண்பர்களாவீர்கள். இனி நான் உங்களை வேலைக்காரன் என்று அழைப்பதில்லை. ஏனெனில் வேலைக்காரன் தன் எஜமானன் செய்வதை அறியமாட்டான். நான் இப்பொழுது உங்களை நண்பர்கள் என்றே அழைக்கிறேன். ஏனென்றால் என் பிதா எனக்குச் சொன்னவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். “நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை. நானே உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நானே உங்களைக் கனிகொடுக்குமாறு ஏற்படுத்தினேன். உங்கள் வாழ்வில் இந்தக் கனி நிரந்தரமாக இருக்கவேண்டும். பிறகு என் பிதா என்பேரில் நீங்கள் கேட்கிற எதையும் உங்களுக்குத் தருவார். இதுவே எனது கட்டளை. ஒருவரோடு ஒருவர் அன்பாயிருங்கள்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்