யோவான் எழுதிய சுவிசேஷம் 15:18-27

யோவான் எழுதிய சுவிசேஷம் 15:18-27 TAERV

“இந்த உலகம் உங்களைப் பகைத்தால், அது என்னைத்தான் முதலில் பகைக்கிறது என்பதை நினைவுகொள்ளுங்கள். நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான் உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது. “ஒரு வேலைக்காரன் தன் எஜமானனைவிடப் பெரியவன் அல்லன் என்று நான் சொன்ன கருத்தை நினைத்துப்பாருங்கள். மக்கள் என்னைத் துன்புறுத்தினால் அவர்கள் உங்களையும் துன்புறுத்துவார்கள். மக்கள் என் உபதேசங்களுக்குக் கீழ்ப்படிந்தால் உங்கள் உபதேசத்திற்கும் கீழ்ப்படிவார்கள். மக்கள் இவற்றையெல்லாம் என்பொருட்டே உங்களுக்குச் செய்வார்கள். அவர்கள் என்னை அனுப்பியவரைப்பற்றி அறியமாட்டார்கள். நான் உலகத்துக்கு வந்து மக்களிடம் பேசாமல் இருந்திருந்தால் அவர்களுக்குப் பாவம் பற்றிய எண்ணம் இல்லாமல் இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நான் அவர்களிடம் பேசிவிட்டேன். எனவே அவர்கள் தம் பாவங்களுக்குச் சாக்குபோக்கு சொல்ல முடியாது. “என்னை வெறுக்கிற எவனும் என் பிதாவையும் வெறுக்கிறான். நான், இதுவரை எவரும் செய்யாதவற்றை மக்கள் மத்தியில் செய்திருக்கிறேன். நான் அவற்றைச் செய்யாமல் இருந்திருந்தால் மக்களுக்குத் தம் பாவத்தைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் போயிருக்கும். ஆனால் நான் செய்தவற்றையெல்லாம் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். எனினும் அவர்கள் என்னையும் என் பிதாவையும் வெறுக்கிறார்கள். ‘அவர்கள் காரணம் இல்லாமல் என்னை வெறுக்கிறார்கள்’ என்னும் வாக்கியம் உண்மையாகும்படி இது நடந்தது. “நான் என் பிதாவிடமிருந்து அந்த உதவியாளரை உங்களிடம் அனுப்புவேன். என் பிதாவிடமிருந்து வருகிற அவர் உண்மையின் ஆவியாக இருப்பார். அவர் வரும்போது என்னைப்பற்றிக் கூறுவார். நீங்கள் தொடக்கக்கால முதலே என்னோடு இருப்பதால் நீங்களும் என்னைப்பற்றி மக்களிடம் சாட்சி கூறுவீர்கள்.”