யோவான் எழுதிய சுவிசேஷம் 11:17-35

யோவான் எழுதிய சுவிசேஷம் 11:17-35 TAERV

இயேசு பெத்தானியாவுக்கு வந்தார். அங்கு வந்ததும் லாசரு இறந்துபோனாதாகவும் அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆனதாகவும் அறிந்தார். எருசலேமிலிருந்து இரண்டு மைல் தூரத்தில் பெத்தானியா உள்ளது. யூதர்கள் பலர் மார்த்தாளிடமும் மரியாளிடமும் வந்திருந்தனர். அவர்களின் சகோதரன் லாசருவின் மரணம் குறித்து துக்கம் விசாரிக்க வந்தனர். இயேசு வந்துகொண்டிருப்பதாக மார்த்தாள் கேள்விப்பட்டாள். அவரை வரவேற்க அவள் போனாள். ஆனால் மரியாள் வீட்டிலேயே தங்கிக்கொண்டாள். மார்த்தாள் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். ஆனால் இப்பொழுதுகூட நீர் கேட்பவற்றை தேவன் உமக்குத் தருவார்” என்றாள். இயேசுவோ, “உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்” என்றார். மார்த்தாளோ, “உயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசிநாளில் அவன் மீண்டும் எழுந்து உயிர் வாழ்வான் என்று எனக்குத் தெரியும்” என்றாள். இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான். என்னில் வாழ்ந்து நம்பிக்கை வைக்கிற எவனும் உண்மையிலேயே இறப்பதில்லை. மார்த்தாளே, இதை நீ நம்புகிறாயா?” எனக் கேட்டார். “ஆம், ஆண்டவரே. நீர்தான் கிறிஸ்து என்று நம்புகிறேன். நீர்தான் தேவனின் குமாரன். நீரே உலகத்திற்கு வரவிருந்தவர்” என்றாள் மார்த்தாள். மார்த்தாள் இவ்வாறு சொன்ன பிறகு அவள் தன் சகோதரி மரியாளிடம் திரும்பிச் சென்றாள். அவள் தனியாக அவளிடம் பேசினாள். “இயேசு இங்கே இருக்கிறார். அவர் உன்னை அழைத்தார்” என்றாள் மார்த்தாள். இதைக் கேட்டதும் மரியாள் எழுந்து இயேசுவிடம் விரைவாகப் போனாள். இயேசு இன்னும் அக்கிராமத்துக்கு வந்து சேரவில்லை. மார்த்தாள் சந்தித்த இடத்திலேயே அவர் இருந்தார். யூதர்கள் பலர் மரியாளோடு அவளது வீட்டில் இருந்தனர். அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தனர். மரியாள் எழுந்து வேகமாகச் செல்வதைப் பார்த்து அவள் லாசருவின் கல்லறைக்குப் போகக்கூடும் என எண்ணினர். அவள் அங்கு அழப்போகலாம் என்று கருதி அவளோடு அவர்களும் சென்றனர். இயேசு இருந்த இடத்துக்கு மரியாள் சென்றாள். அவள் இயேசுவைப் பார்த்ததும் குனிந்து அவரை வணங்கினாள். “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என்னுடைய சகோதரன் இறந்துபோயிருக்கமாட்டான்” என்று சொன்னாள். மரியாள் அழுவதை இயேசு பார்த்தார். அவளோடு வந்த யூதர்களையும் அவர் கவனித்தார். அவர்களும் அழுதனர். இயேசு மனப்பூர்வமாக வருந்தி, ஆழமாக வேதனைப்பட்டார். “அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவளிடம் கேட்டார். அவர்கள் அவரிடம், “கர்த்தரே, வந்து பாரும்” என்றனர். இயேசு அழுதார்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோவான் எழுதிய சுவிசேஷம் 11:17-35