எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:12-17

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:12-17 TAERV

கர்த்தர் கூறுகிறார்: “இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே! ஆற்ற முடியாத காயத்தை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். குணப்படுத்த முடியாத ஒரு காயத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உங்கள் புண்களைப்பற்றி அக்கறை எடுக்க யாருமில்லை. எனவே நீங்கள் குணம் பெறமாட்டீர்கள். நீங்கள் பல நாடுகளோடு நட்புக்கொண்டீர்கள். ஆனால் அந்நாடுகள் உங்களைப்பற்றி கவலைப்படுவதில்லை. உங்கள் ‘நண்பர்கள்’ உங்களை மறந்துவிட்டனர். நான் உங்களைப் பகைவனைப் போன்று தண்டித்தேன். நான் உங்களை மிகக் கடுமையாகத் தண்டித்தேன். உங்களது அநேக குற்றங்களால் நான் இதனைச் செய்தேன். உங்களது எண்ணிலடங்கா பாவங்களால் நான் இதனைச் செய்தேன். இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்களது காயங்களைப்பற்றி ஏன் அழுகிறீர்கள்? உங்கள் காயங்கள் வலியுடையன. அவற்றுக்கு மருந்து இல்லை. கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். காரணம் உங்கள் பெரும் குற்றம்தான். உங்களது பல பாவங்களின் காரணமாக கர்த்தராகிய நான் இதனைச் செய்தேன். அந்நாடுகள் உங்களை அழித்தனர். ஆனால் இப்பொழுது அந்நாடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரவேல் மற்றும் யூதாவே, உங்கள் பகைவர்கள் கைதிகளாவார்கள். அந்த ஜனங்கள் உங்களிடமிருந்து திருடினார்கள். ஆனால் அவர்களிடமிருந்து மற்றவர்கள் திருடுவார்கள். அந்த ஜனங்கள் போரில் உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துக் கொண்டனர். ஆனால் போரில் பிறர் அவர்களை கொள்ளையடிப்பார்கள். நான் உங்களது உடல் நலத்தைத் திரும்ப கொண்டு வருவேன். நான் உங்களது காயங்களைக் குணப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “ஏனென்றால், மற்ற ஜனங்கள் உங்களை தள்ளுண்டவர்கள் என்று சொன்னார்கள். அந்த ஜனங்கள், ‘சீயோனைப்பற்றி யாரும் அக்கறைகொள்ளமாட்டார்கள்’” என்று சொன்னார்கள்.